தெலங்கானா அருகே அதிகாலை யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 20 லட்சம் நகை கொள்ளை: சிக்னலை உடைத்து மர்ம நபர்கள் அட்டூழியம்

திருமலை: தெலங்கானா அருகே அதிகாலை சிக்னலை சேதப்படுத்தி யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளிடம் ₹20 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.கர்நாடகாவில் பெங்களூரு அடுத்த யஷ்வந்த்பூரில் இருந்து தெலங்கானா மாநிலம், காச்சிகூடாவிற்கு யஷ்வந்த்பூர்  எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் புறப்பட்டது.  ரயில் தெலங்கானா மாநிலம், மெகபூப் நகர் மாவட்ட ரயில்  நிலையத்தில் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு நின்றது. பின்னர் ரயில் புறப்பட்ட 10 நிமிடங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தீவுட்டிபள்ளி என்ற இடத்தில் மர்ம நபர்கள் ரயில் சிக்னலை கல்லால் உடைத்து  சேதப்படுத்தியுள்ளனர். இதனால் சிக்னல் கிடைக்காததால் ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தினார். ரயில் நின்ற சில நிமிடங்களிலேயே மர்மநபர்கள் பெட்டியின் மீது கற்கள் வீச தொடங்கினர். இதனால் பயணிகள் என்ன நடந்தது  என்று தெரியாமல் கதவை திறந்தவுடன் தலைமறைவாக இருந்த 6 பேர் கொண்ட கும்பல்  எஸ்2, எஸ்3, எஸ்4  பெட்டிகளில் ஏறி பயணிகளிடம் இருந்து நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து நேற்று காலை காச்சிகூடா ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் பாதிக்கப்பட்ட பயணிகள் புகார் செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ₹25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ₹10  ஆயிரம் மற்றும்  செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காச்சிகூடா ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதேபோன்று விசாகப்பட்டினம், அனந்தப்பூர் போன்ற இடங்களில் ரயில்  சிக்னலை உடைத்து சேதப்படுத்தி பயணிகளிடம் கொள்ளையடித்த சம்பவம் நடைபெற்ற நிலையில் அதே கும்பலை சேர்ந்தவர்களுக்கு  இந்த  கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: