புரட்டாசி முதல் சனி, தொடர் விடுமுறை எதிரொலி திருப்பதியில் கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்: மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறையால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் சிலர் மயங்கி விழுந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புனிதமான புரட்டாசி மாதத்தையொட்டி அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மொகரம் பண்டிகையொட்டி அரசு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடர்  விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் மாலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் இலவச தரிசனத்திற்காக காலை முதல் வைகுண்டத்தில் உள்ள 31 அறைகள்  நிரம்பி சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது பக்தர்கள் காத்திருக்கும் வரிசைகளில் போதிய வசதிகள் இல்லாததால் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில்  சிக்கிய பல பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்ட பக்தர்களையும் மயங்கி விழுந்த  பக்தர்களையும் மீட்டு, சிகிச்சைக்காக திருமலை அஸ்வினி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மூச்சுத்திணறால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் மருத்துவமனை முன் காத்திருக்கின்றனர்.

விஐபி தரிசனம் ரத்து

புரட்டாசி மாதத்தையொட்டி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் வழங்கக்கூடிய விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றும்,  இன்றும்,  28, 29, 30 அக்டோபர் 5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21 ஆகிய நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் அரசாங்கத்தின் ரீதியான பதவியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மட்டும் நேரடியாக வந்தால் விஐபி  தரிசனம் செய்து வைக்கப்படும்.  மற்ற எந்த சிபாரிசு கடிதங்களின் மூலம்  விஐபி தரிசனம் வழங்க முடியாது. எனவே இதனை பக்தர்கள் கருத்தில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று  அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: