புதுவை ‘நரபலி’ சம்பவ விசாரணையில் திடீர் திருப்பம் 13 பவுன் நகைக்காக பெண்ணை கொன்ற போலி சாமியார்

புதுச்சேரி: 13 பவுன் நகையை அபகரிப்பதற்காக தோஷம் நீக்குவதாக நாடகமாடி, இளம்பெண்ணை கண் மூடி உட்காரவைத்து தலையை அறுத்து கொன்றதாக சாமியார் திடுக் வாக்குமூலம் அளித்துள்ளார்.புதுவை வில்லியனூர் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி என்ற சிந்துஜா (27). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 19ம் தேதி வீட்டில்  இருந்து வெளியே சென்ற கிருஷ்ணவேணி, செங்கன்ஓடை காளிகோயில் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கணவர் அசோக்ராஜ் அளித்த புகாரின்பேரில் மங்கலம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை  நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அசோக்ராஜ் ேகாடீஸ்வரராகும் ஆசையில் பக்கத்து வீட்டில் வசித்த சாமியார் கோவிந்தராசுவால்  மனைவியை நரபலி கொடுத்ததாக தெரிந்தது. இதையடுத்து, சாமியாரை போலீசார் தேடி  வந்தனர்.

இந்தநிலையில், அவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர். அப்போது, கோவிந்தராசு அளித்த வாக்குமூலம் வருமாறு: கரிக்கலாம்பாக்கம் மாஞ்சோலை பகுதியில் நானும், அசோக்ராஜ் குடும்பமும் ஒரே தெருவில் வசித்து வந்ேதாம். அவரது தங்கைக்கு திருமணம் தாமதமாகி கொண்டே வந்த விஷயம் எனக்கு ஒருநாள் தெரியவந்தது. இதனிடையே  அசோக்ராஜ் குடும்பத்தினரிடம் நெருங்கி பழகியபோது கிருஷ்ணவேணிக்கும், அவரது கணவருக்கும் சாமிபக்தி, மூட நம்பிக்கை இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் உங்கள் வீட்டில் நேரம் சரியில்லை என கூறி இருவரையும்  தனித்தனியாக ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்டேன். இதற்காக திருவண்ணாமலை வேட்டவலம் அய்யனார் கோயிலுக்கு அசோக்ராஜ் குடும்பத்தை அழைத்துச் சென்று அங்குள்ள சாமியாரிடம் அவரின் தங்கை திருமணத்துக்காக  பரிகார பூஜை செய்தேன். அதன்பிறகு அவரது தங்கைக்கு திருமணம் கைகூடி ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதற்காக நகைகள் வாங்கி வைக்கப்பட்டிருந்த விபரம் எனக்கு தெரியவந்தது. அந்த நகைகளை பறிக்க திட்டமிட்ட நான், அசோக்ராஜிக்கு தெரியாமல் கிருஷ்ணவேணியிடம் தனியாக பேசினேன். அப்போது உனது வீட்டில் பில்லி,  சூனியம் இருப்பதால் திருமணம் நடப்பதற்குள் மிகப்பெரிய பாதகம் நடக்கப்போகுது என பயத்தை கிளப்பினேன். மேலும், உனது கணவருக்கு 2 தாரம், அவர் உன்னை விட்டு போய் விடுவார் அல்லது பைத்தியம் பிடித்து விடும். இதற்கு நகைகளை வைத்து பூஜை நடத்தி பரிகாரம் செய்ய வேண்டும். இதை வெளியில் சொன்னால் பலிக்காது  என்று கூறி நம்பவைத்தேன். இதன்பின், வீட்டில் உள்ள நகைகளுடன் அருகிலுள்ள காளி கோயிலில் பரிகார பூஜைக்கு கிருஷ்ணவேணியை மட்டும் தனியாக வருமாறு தெரிவித்தேன்.அதை ஏற்று அவரும் கடந்த 19ம் தேதி இரவு, காளி கோயிலுக்கு வந்தார். அவரை கோயில் குளத்தின் தரையில் சாக்கை விரித்து பரிகார பூஜை செய்ய உட்கார வைத்தேன்.

அப்போது அசோக்ராஜ் தங்கை திருமணத்துக்கு வாங்கி  வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் அவர் அணிந்திருந்த 8 பவுன் நகையை கழற்றி மடியில் வைக்குமாறு கூறினேன். அவரும் நகைகளை மடியில் வைத்தபடி தரையில் அமர்ந்தார். பின்னர் பரிகார பூஜை செய்யும்போது யாரையும்  பார்க்கக் கூடாது, யாருக்காக பரிகார பூஜை செய்ய வேண்டுமோ அவர்களது பெயர்களை உள்ளங்கையில் எழுதி நகைகளை முன்னே வைத்து எலுமிச்சை பழத்துடன் ஆழ்ந்த தியானத்தில் இருக்குமாறு கிருஷ்ணவேணியிடம்  கூறினேன். அதன்படி அவரும், தனது கணவர் மற்றும் குழந்தைகளின் பெயர்களை உள்ளங்கையில் எழுதியதோடு, நகைகள் அனைத்தையும் முன்புறம் வைத்துவிட்டு எலுமிச்சை பழத்தை கையில் இறுகிபிடித்தபடி உட்கார்ந்து  தியானத்தில் இறங்கினார். இதற்காக அவரது கைகளை சேலை முந்தானையால் இறுக்கமாக கட்டிக் கொள்ளுமாறு கூறினேன். அதையும் அவர் அப்படியே செய்தார்.அப்போது, பின்னால் சென்று ஏற்கனவே தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரது கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்தேன். அவர் கீழே சரிந்ததும், நகைகளை எடுத்துக் கொண்டு சென்று விட்டேன். இவ்வாறு  கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து கோவிந்தராசுவை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: