நாட்டிலேயே முதன்முறையாக அரசு சேவைகளை பெற ஆந்திராவில் வீடுகளுக்கு க்யூஆர் கோடு: சந்திரபாபு நாயுடு துவங்கி வைத்தார்

திருப்பதி: நாட்டிலேயே முதன்முறையாக அரசு சேவைகளை பெற வீடுகளுக்கு க்யூஆர் கோடு வழங்கும் திட்டத்தை திருப்பதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூர் மாவட்டம், திருப்பதி கபில தீர்த்தத்தில் 150 ஏக்கரில் பல்வேறு மூலிகைச் செடிகளுடன்  கூடிய நகர வனத்தை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர்  என்.டி.ஆர் சந்திப்பிலிருந்து நகர வனம்  திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திய  மாணவ, மாணவிகளுடன் இணைந்து ஒரு கிமீ தூரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வரை பேரணியாக வந்தார்.அப்போது மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் 9 இலக்க எண்ணுடன் கூடிய க்யூஆர் கோட் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த 9 இலக்க எண்ணில் முதல் 3 எண்கள் அந்த வீடு அமைந்துள்ள  பகுதியையும், அடுத்த 3 இலக்க எண் அந்த வீடு அமைந்துள்ள தெருவையும், அடுத்த 3 இலக்க எண் அந்த வீட்டின் முகவரியையும் குறிப்பிடுகிறது.

இந்த க்யூஆர் கோடை அரசின் புறசேவா மொபைல் செயலியில் ஸ்கேன் செய்து,  சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் குடிநீர், மின்சாரம் போன்ற பிரச்னைகளை தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது குறித்து முதல்வருக்கு அதிகாரிகள்  செயல்விளக்கம் அளித்தனர். பின்னர் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:திருப்பதியில் நாட்டிலேயே முதல் முறையாக ஒவ்வொரு வீட்டுக்கும் க்யூ ஆர் கோடு உடன் கூடிய டிஜிட்டல் கதவு எண்  கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக உங்கள் வீட்டில் நகராட்சியின் சார்பில் எத்தனை மணிக்கு குப்பைகள் எடுக்கப்பட்டது என்பதை நான் எனது அலுவலகத்திலிருந்து காண முடியும். மேலும்,   தீயணைப்பு, ஆம்புலன்ஸ் போன்ற இதர சேவைகள்  உடனுக்குடன் நேரடியாக உங்கள் வீட்டை வந்தடையவும் மின்சாரம், குடிநீர் போன்ற அனைத்து அரசு சேவைகளையும் இந்த டிஜிட்டல் கதவு எண் மூலமாக பொதுமக்கள் பயன்பெறும் விதமாக இத்திட்டம் முதல் முறையாக  கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: