கிராம மக்களை வாழ வைக்கும் ஜடேரி நாமக்கட்டிகள் „

* வைணவர்களின் நெற்றியில் திருமண்ணாகும் வெள்ளைப்பாறைகள்

செய்யாறு: வைணவர்களின் நெற்றியில் திருமண்ணாக இடப்படும் நாமக்கட்டிகள் தயாரிப்பில் உலகில் தலையாய இடத்தை பிடித்து செய்யாறு அடுத்த ஜடேரி கிராமம் பெருமை சேர்த்து வருகிறது.புரட்டாசி மாதத்தில் வைணவர்களின் நெற்றியில் மிளிரும் நாமம் செய்யாறு அருகே ஜடேரி என்ற சிறிய கிராமத்தில் தயாராகிறது என்று சொன்னால் நம்பத்தான் வேண்டும். நாமக்கட்டிகளை உற்பத்தி செய்யும் இக்கிராமம்  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரின் அருகில் 7 கி.மீ தொலைவில் சுமங்கலி கிராமம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வாழும் 150 குடும்பங்களில் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நாமக்கட்டி  செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.நாமக்கட்டி தயாரிப்புக்கு முதல் ஆதாரமாக இருப்பவை வெள்ளை பாறைகள். இவை ஜடேரி கிராமத்தின் தாய் ஊரான தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் ஏராளமாக கிடைக்கிறது.

இப்பகுதியில் ஆறரை அடி ஆழத்திற்கு தோண்டிச் சென்றால் வெள்ளை நிறத்திலான பாறைகள் நிறைய உள்ளன. வெள்ளை நிற பாறைகள் சுமார் 15 அடி ஆழம் வரையில் காணப்படுகிறது. வெள்ளை நிறத்தில் காணப்படும்  பாறைகளை வெட்டி எடுத்து, மாட்டு வண்டிகள் மூலம் ஜடேரி கிராமத்திற்கு எடுத்து வந்து பாறைகளை சிறு சிறு கட்டிகளாக உடைத்து பின் அவற்றை அரைவை இயந்திரங்களில் மாடுகளைப் பூட்டி வைத்து ஓட்டி மாவாக  அரைக்கிறார்கள்.இப்படி பாறைகளாக உள்ள வெள்ளை கற்களை மாவாக அரைத்து பின்னர் தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைக்கின்றனர். அப்போது, அந்த மண்ணின் மிருதுவான வண்டல் மண் மேலடுக்காக படியும். அதன் பின்னர் பள்ளத்தில்  தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றி விட்டு அடியில் படிந்துள்ள மிருதுவான வெள்ளை மண்ணை எடுத்து ஈரப்பதத்துடன் பெரிய பெரிய மண் உருண்டைகளாக போட்டு வைக்கின்றனர்.

மண் உருண்டைகள் மிக லேசான ஈரப்பதத்தில் இருக்கும்போது சிறு, சிறு உருண்டைகளாக தட்டி நாமக்கட்டிகளாக உருட்டி வெயிலில் காய வைக்கின்றனர். பிறகு நாமக் கட்டிகள் நன்கு காய்ந்த பிறகு வைக்கோல் போட்டு  மூட்டை மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு வைக்கின்றனர்.இந்த நாமக்கட்டி செய்யும் மண்ணுடன் சிறிது சாம்பல், வாசனை திரவியம் சேர்த்து விபூதியாகவும் இங்கு தயாரிக்கின்றனர். இவ்வாறு இங்கு தயாரிக்கப்படும் நாமக்கட்டி, விபூதி கட்டிகள் திருப்பதி, காஞ்சிபுரம், ரங்கம் போன்ற  கோயில்களிலும் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. நெற்றியில் இடுவதற்கு மட்டுமின்றி, நாமக்கட்டி நாட்டு மருந்து தயாரிப்பிற்கும் பயன்படுவதால் ஜடேரி நாமக்கட்டிகளை நாட்டு  மருந்து வியாபாரிகளும் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். ஜடேரி கிராமத்தில் உள்ளவர்கள் நான்கு, ஐந்து தலைமுறைக்கு மேலாக பரம்பரைத் தொழிலாக நாமக்கட்டிகளை செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு நாமம் தரிக்க  உதவுகிறது நாமக்கட்டி. அந்த நாமக்கட்டி செய்யும் தொழில்தான் ஜடேரி கிராமத்தினரின் பசியை போக்குகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: