கடத்தல் வாகனங்கள் துருப்பிடித்து பாழாகும் அவலம்: ஏலம் நடத்தப்படாததால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு

வேலூர்: தமிழகத்தில் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரல் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஏலம் விடப்படாமல் மண்ணோடு மண்ணாகி அரசுக்கு பலகோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை  தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலையும் சேர்த்து கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர். இதில் லாரி, வேன், கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என்று பல கோடி  மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. அதேபோல் டன் கணக்கில் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இதில் கடத்தல் ரேஷன் அரிசியினை அந்தந்த மாவட்டங்களில் உள்ள நுகர்பொருள்  வாணிப கிடங்கில் ஒப்படைத்து விடுகின்றனர். அதேபோல் கடத்தல் வாகனங்களை பொறுத்தவரையில் பறிமுதல் செய்யும் வாகனங்கள் தொடர்பான விவரங்களை மாவட்ட வழங்கல் அலுவலருக்கு சமர்ப்பிக்கின்றனர். அவர்கள்  மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆன்லைனில் ஏலம் விடுகின்றனர்.

இதுவே கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்யும் வாகன ஏலம் முறையாக தற்போது நடைமுறையில் உள்ளது என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.இதில் ஆன்லைன் மயமான வாகன ஏலமானது, முறையாக நடத்தப்படாததால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ₹500 கோடிக்கும் அதிகமான வாகனங்கள், மழையில் நனைந்தபடியும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்து மண்ணோடு  மண்ணாகும் அவல நிலை உள்ளது. இதனால் அரசுக்கான வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதற்கு சாட்சியாக வேலூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திலும் மண்ணில் மக்கி வீணாகும் நிலையில்  சுமார் ₹25 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வாகனங்கள் தள்ளப்பட்டுள்ளன.எனவே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு சம்மந்தப்பட்ட நபர்களுக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னர், அபராதம் செலுத்தாமல்  இருந்தால் அந்த வாகனங்களை உடனடியாக ஏலம் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி பறிமுதல் செய்யும் வாகனங்களை முறையாக ஏலம் விட்டால் அரசுக்கும் பல கோடி வருவாய் கிடைக்கும் என்றும் சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: