தாம்பரம்-கோயம்பேடு இடையே அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் புறநகர் புதிய பஸ் நிலையம் எப்போது?

* 2 இடங்கள் மாற்றியும் பணிகள் தொடங்கவில்லை * 5 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் அவலம்

சென்னை: சென்னை புறநகர் புதிய பேருந்து நிலையம் அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இதுவரை அதற்கான பணிகள் தொடங்காததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்தவாறு உள்ளது. சுமார் 80 லட்சம் பேர் சென்னையில் தற்போது வசித்து வருகின்றனர். இதற்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. 42 லட்சத்து 54  ஆயிரத்து 811 பைக்குகள், 40,809 லாரிகள், 1972 ஆம்புலன்சுகள் உள்பட மொத்தம் சென்னையில் 53 லட்சத்து 94,413 வாகனங்கள் உள்ளன.சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களை சேர்ந்தவர்கள். பஸ் போக்குவரத்து சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரம்பத்தில் சென்னை பிராட்வேயில் தான் புறநகர்  பேருந்து நிலையம் இருந்தது. வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் இங்கு தான் வந்து செல்லும். ஆனால் நாளடைவில் போக்குவரத்து நெருக்கடி அதிகமானதால் ஊருக்கு வெளியே புறநகர் பஸ் நிலையம்  அமைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.

அதன்படி திமுக ஆட்சியில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான அங்கு நாள்தோறும் 2,750 அரசு பஸ்கள் பல்வேறு வெளிமாவட்டங்கள் மற்றும்  வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதுதவிர பேருந்து நிலையத்தின் முன்புறம் மாநகர பஸ்நிலையம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட சில வருடங்களில் கோயம்பேடு பகுதி அபரீத வளர்ச்சி அடைந்தது. விடுமுறை நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு செல்கின்றனர்.  அருகில் தனியார் ஆம்னி பஸ் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.இதுதவிர கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரும் பாதைகளான பூந்தமல்லி, மதுரவாயல் ஆகிய ஏரியாக்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் கடும் போக்குவரத்து  நெரிசலுக்கிடையே தான் கோயம்பேடு வந்தடைகிறது. குறிப்பாக, தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக்கால விடுமுறை நாட்களில் பல கி,.மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதனால் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

பெரும்பாலும், திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களில் இருந்து தான் அதிக அளவிலான பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. எனவே கடந்த 2013ம் ஆண்டு  சென்னைக்கு வெளியே வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தென்மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் அங்கு நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் விவசாய நிலம் என்பதால் அங்கு பேருந்து நிலையம் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.இதனால் வண்டலூர் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பின்னர், வண்டலூருக்கு பதிலாக கூடுவாஞ்சேரியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க  அரசு திட்டமிட்டது. இறுதியாக வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள கிளாம்பாக்கத்தில் 88.5 ஏக்கர் பரப்பளவில் சுமார் ₹300 கோடியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அரசு  அறிவித்தது.

ஆனால் அந்த இடத்திலும் சில பிரச்னை ஏற்பட்டது. பின்னர் அரசுக்கு சாதாகமாக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன், வருவாய்துறை சார்பில் உடனடியாக 30 ஏக்கர் இடத்தை சிஎம்டிஏவுக்கு வழங்க அரசு உத்தரவிட்டது. நிலம்  வழங்கப்பட்டவுடன் கடந்த ஏப்ரல் மாதம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் ஊரப்பாக்கம் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, 30 ஏக்கர் பரப்பளவில் சுமார் 6 லட்சத்து 40,000 சதுர அடி பரப்பில் பஸ்  நிலையம் கட்டிடம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாள்தோறும் 1.50 லட்சம் பேர் வந்து செல்லும் வகையில் அடுத்த 2 ஆண்டிற்குள் நவீன முறையில் பஸ்நிலையம் கட்டி முடிக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டது.இந்த பஸ் நிலையம் அமைந்தால் தாம்பரம், மதுரவாயல், பூந்தமல்லி, கோயம்பேடு பகுதிகளில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணை முதல்வர் ஆய்வுக்குப் பின் ஊரப்பாக்கம்  பஸ்நிலையம் பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆய்வு நடத்தி 6 மாதங்களாகியும் இதுவரை டெண்டர் பணிகள் கூட முடியவில்லை. இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘’கடந்த 2 வாரத்துக்கு முன்பு தான்  டெண்டர் வெளியிட்டுள்ளோம். டெண்டர் இறுதியான பின் பணிகள் தொடங்கும்’ என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லும் பாதைகளான தாம்பரம், பூந்தமல்லி, பெருங்களத்தூர், வண்டலூர், மதுரவாயல் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தொடர்  விடுமுறை நாட்களில் மேற்கண்ட இடங்களில் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்களும் நீண்ட நேர தாமதத்துக்குப் பின் செல்கிறது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல், தாம்பரத்தை கடந்து  செல்ல சில நேரங்களில் அதிகபட்சம் 2 மணி நேரம் வரை ஆகிறது. வெளியூர் செல்லும் பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சென்னை புறநகர்களுக்கு செல்லும் மாநகர பஸ்களும் சிக்கி கொள்கின்றன. இதனால்  பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் போக்குவரத்து வசதியை நவீனப்படுத்துவது ஒரு அரசின் கட்டாய கடமை ஆகும். மக்கள் நெருக்கடிக்கேற்ப புதிய மேம்பாலங்கள் அமைப்பது, சாலைகள் விரிவாக்கம் செய்வது, தரமான  சாலைகள் அமைத்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளை அரசு செய்ய வேண்டும். ஆனால் தற்போது ஆட்சியில் உள்ள அதிமுக அரசு போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தாம்பரம், பூந்தமல்லி, வண்டலூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் தினமும் பீக் அவர்சில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுவும் வார விடுமுறை நாட்கள் என்றால் சொல்ல முடியாத அளவுக்கு நெரிசல் இருக்கும்.  இதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு பேருந்து நிலையம் தான். எனவே தான் அதற்கு மாற்றாக சென்னைக்கு வெளியே புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்தது. ஆனால் அரசின் அலட்சியத்தால் இன்று  வரை புதிய பஸ் நிலையம் அமைக்கவில்லை.கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு அறிவிப்புகளை மட்டுமே இந்த அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வண்டலூரில் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்றார்கள், பின்னர் கூடுவாஞ்சேரி என்றார்கள், தற்போது  ஊரப்பாக்கத்தில் பஸ் நிலையம் அமைக்கப்போவதாக ஆய்வு நடத்தினார்கள். ஆனால் இன்றுவரை அதற்கான எந்த பணிகளும் தொடங்கவில்லை. இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் தாம்பரத்தில் இருந்து  கோயம்பேடு செல்ல 5 மணி நேரம் காத்து கிடக்கும் அவலம் கூட ஏற்படலாம். எனவே மக்களின் சிரமம் கருதி ஊரப்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க அரசு முன்வர  வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.கூடுவாஞ்சேரி தான் பெஸ்ட்: வண்டலூரில் ரத்தானதால் கூடுவாஞ்சேரியில் தான் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் திடீரென ஊரப்பாக்கத்துக்கு மாற்றிவிட்டனர். கூடுவாஞ்சேரியில் பஸ்  நிலையம் அமைத்தால் தான் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று வெளியூர் பயணிகள் தெரிவித்துள்ளனர். அதாவது வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூடுவாஞ்சேரியில்  ரயில்நிலையத்தில் தான் நின்று செல்லும். எனவே அங்கு பஸ் நிலையம் அமைத்தால், ரயிலில் வருபவர்கள் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு பஸ்களில் செல்ல வசதியாக இருக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: