×

ஊத்துக்கோட்டையில் 120 ஆண்டுகள் பழமையான பள்ளி கட்டிடத்தை சீரமைத்தார் டிஎஸ்பி

சென்னை: ஊத்துக்கோட்டையில் 120 ஆண்டுகள்  பழமை வாய்ந்த 2  அரசு தொடக்க பள்ளிகளை தத்தெடுத்து  டிஎஸ்பி மற்றும் போலீசார் சீரமைத்தது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சென்னை - திருப்பதி சாலையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் காவல் நிலையம் எதிரே அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.  இப்பள்ளி 1898ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டு  வகுப்பறையில்,  இரண்டு   ஆசிரியரை கொண்டு துவக்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது ஒரு  தலைமை ஆசிரியர் உட்பட 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.  இதில் 1898ம் ஆண்டு பள்ளி தொடங்கப்பட்டபோது  ஊத்துக்கோட்டை, தாசுகுப்பம், பால்ரெட்டி கண்டிகை, அனந்தேரி, போந்தவாக்கம்  என சுற்றுப்புற கிராமங்களில் இருந்து  சுமார் 50க்கும் மேற்பட்ட  மாணவர்கள் படித்து வந்தனர்.  பின்னர் 1949ம் ஆண்டு இப்பள்ளி  நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக கூடுதல் வகுப்பறையும் கட்டப்பட்டு தற்போது 12 வகுப்பறைகள் உள்ளன, பின்னர் 1954ல் ஊத்துக்கோட்டையில் உள்ள திருவள்ளூர்  சாலையில் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டதால், இப்பள்ளி மீண்டும் தொடக்க பள்ளியாகவே செயல்பட்டது. தற்போது இப்பள்ளியில் ஊத்துக்கோட்டையிலிருந்து மட்டும் 360 மாணவ - மாணவிகள்  படிக்கின்றனர். இந்த  பள்ளியில் படித்த பல மாணவர்கள் காவல்துறை, வருவாய்துறை, பொதுப்பனித்துறை மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் புகழ் பெற்று விளங்குகிறார்கள்.

இந்நிலையில் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இப்பள்ளியின் முதல் கட்டிடம் கடந்த சில வருடங்களாக விரிசல் ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதில் மாணவ - மாணவிகள் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  இதனால், இந்த பழமை வாய்ந்த பழுதடைந்த பள்ளிகட்டிடத்தை இடிக்க வேண்டும் என பொற்றோர்களும், பழைய ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில்  சென்னை அயன்புரம் உதவி கமிஷனராக இருந்த சந்திரதாசன் கடந்த பிப்ரவரி மாதம்  ஊத்துக்கோட்டை டிஎஸ்பியாக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற சில நாட்களில் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு  வந்த போது எதிரே இருந்த 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிக்கட்டிடத்தை பார்வையிட்டார். அப்போது அந்த பள்ளியை பற்றியும், இதேபோன்று ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியை பற்றியும்  கேட்டறிந்தார். அந்த பள்ளிகளில் மழை காலத்தில்  மழைநீர் தேங்கி நிற்பது குறித்தும் பள்ளியின் நிலை குறித்தும்  தெரியவந்தது. பின்னர் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு மணல் நிரப்பியும், மேலும் பள்ளியில்  உள்ள 20க்கும் மேற்பட்ட வகுப்பறை மற்றும் கழிவறைகளுக்கு  வர்ணம் தீட்டியும் புதுப்பித்தனர்.  பின்னர் இதையறிந்த டிஎஸ்பி சந்திரதாசன்  மேற்கண்ட பள்ளிகளை தத்தெடுத்தார்.

அவருடன் ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் மற்றும்  பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப் - இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் டிஎஸ்பியுடன் இணைந்து பள்ளிகளை  சீரமைத்தனர், போலீசாரின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தது.தற்போது, ஊத்துக்கோட்டை டிஎஸ்பியாக இருக்கும் சந்திரதாசன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றியுள்ளார் என்பதும் பின்னர் அவர் போலீஸ் பயிற்சி முடித்து எஸ்ஐ மற்றும்  இன்ஸ்பெக்டராக இருந்து தற்போது டிஎஸ்பியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்ததால்தான் பள்ளிகள் மீது அக்கறையுடன் காணப்படுகிறார்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல அரசு  தொடக்கப்பள்ளிகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதை வசதி படைத்தவர்கள் தத்தெடுத்து சீரமைத்து தர வேண்டும். மேலும்  ஊத்துக்கோட்டையில் அரசு பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்ததற்கு டிஎஸ்பி உள்ளிட்ட போலீசாரை பாராட்டுகிறோம் என கூறினர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : uttukkottai, old, DSP , school building
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு