×

வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவிலும் அமல் 4.4 லட்சம் பாலியல் குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு

* புகாரை பதிவிட தனியாக இணையதளம் துவக்கிவைப்பு
* காப்பகங்களில் அதிக அத்துமீறல்கள் நடப்பது அம்பலம்

சென்னை: வளர்ந்த நாடுகளின் வரிசையில், இந்தியாவில் பாலியல் குற்றவாளிகள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரை பதிவிட தனியாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும்,  காப்பகங்களில் தான் அதிகளவு பாலியல் அத்துமீறல்கள் நடப்பது புள்ளிவிபரங்களில் அம்பலமாகி உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு, டில்லியில் ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி ஒருவர் கொடூர கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மரணம் அடைந்ததை அடுத்து நாடு முழுவதும் பாலியல் கொடுமைக்கு எதிராக போராட்டங்கள்  வெடித்தன. அப்போது, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போன்று, பாலியல் குற்றவாளிகளின் பதிவேடு தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், அடுத்த கட்டத்துக்கு இத்திட்டம்  செல்லாமல் முடங்கியது. தற்போது, இத்திட்டத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் துணை அமைப்பாக சட்ட அமலாக்கத் துறை மூலம் பாலியல் குற்றவாளிகள் பதிவேடு பராமரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள், நாடு முழுவதுமுள்ள, 20 ஆயிரம் போலீஸ்  நிலையங்களின் ஆவணங்களில் உள்ள  பாலியல் குற்றம் புரிந்தவர்கள் தொடர்பான விபரங்களை சேகரித்து, பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் ‘அப்டேட்’ செய்துள்ளனர். அதில், சம்பந்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்ட  குற்றவாளியின் பெயர், புகைப்படம், முகவரி, கைரேகை, டிஎன்ஏ சேம்பிள், பான் எண், ஆதார் எண் போன்ற விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்ததிட்டப்படி, இணையதளத்தில் இடம்பெறும் நபர், குற்றமற்றவராக நீதிமன்றத்தால்  விடுவிக்கப்பட்டால், அவரின் பெயர் இணையதளத்தில் உள்ள பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும்.
மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘cybercrime.gov.in’ என்ற இணைய தளத்தை துவக்கிவைத்தார்.

இதுகுறித்து, உள்துறை மற்றும் குழந்தைகள் நல அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2005ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, நாடு முழுவதும் 4.4 லட்சம் பாலியல் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்சோ  போன்ற சட்டபிரிவுகளில் கைதான தண்டனை குற்றவாளிகள், நீதிமன்றம் அளித்த தண்டனை அடிப்படையில் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த நாடுகளின் வரிசையில், தற்போது இந்தியாவிலும் இத்திட்டம்  அமல்படுத்தப்பட்டதால், பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக புகார்களை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், ‘‘நாட்டில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் காப்பகங்களில் தான் நடக்கிறது என்பது புள்ளி  விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான போலீஸ் ஸ்ேடஷன்களுக்கு, 79 லட்சம் ‘ரேப் கிட்’ (பாலியல் பலாத்கார பரிசோதனை தடயவியல் கருவி) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’  என்றார்.

* குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.

* 2017ம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, 15 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,developed countries,sex offenders,release
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...