குற்றச்செயல்களை தடுக்க உதவும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் திட்டம்: தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா?

நாகர்கோவில்: குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் அறிவிக்கப்பட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.மத்திய மோட்டார் வாகன சட்டம் 2001ன் அடிப்படையில் வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் (High Security Registration Plates- HSRP) பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு  உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே குஜராத், மேற்கு வங்கம், அசாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தும் திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. அண்டை மாநிலமான கேரளாவும் இதற்கான நடவடிக்கைகளை  தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் எப்போது என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் என்று கூறி  அனுமதியில்லாத நிறுவனங்கள் தரமற்ற முறையில் தயாரித்து வழங்கப்பட்ட நம்பர் பிளேட்கள் புழக்கத்தில் வந்தன. இதனை பயன்படுத்திய பலரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். பலரும் தங்கள் வாகனங்களில்  ஹாலோகிராம் பொருத்திய நம்பர் பிளேட்களை உடைக்க வேண்டிய நிலையும், அழிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

 இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்துகின்ற ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு கோடு எண் வழங்கப்படும். வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் இதனுடன் இணைக்கப்படும். மோட்டார் வாகன துறை இந்த  விபரங்களை பாதுகாக்கும். இந்த நம்பர் பிளேட்டை அகற்ற முயன்றால் அது உடைந்து போகும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அலுமினிய பிளேட்டில் குரோமியம் உபயோகித்து ஹாலோகிராம் வடிவில் எண் எழுதப்படும்.  அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒர்க்‌ஷாப்புகளில் மட்டுமே இதனை பொருத்த இயலும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.முதல்கட்டமாக புதிய வாகனங்களில் இவற்றை பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரைகள் வழங்கியிருந்தது. தமிழக அரசும் இதனை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் திட்டம் தமிழகத்தில் கிடப்பில்  போடப்பட்டுள்ளதாக வாகன ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் வாகனங்களை மையப்படுத்தி நடக்கின்ற குற்றச்செயல்கள் பெருகியுள்ளன. வாகனத்தை திருடி அவற்றை உதிரி பாகங்களாக மாற்றுதல், வேறு நம்பர் பிளேட்களை பொருத்தி இயக்குதல், திருட்டு வாகனங்களை  குற்றசெயல்களுக்கு பயன்படுத்துதல் போன்றவை நடக்கிறது. இவற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் திட்டத்தை தமிழகத்தில் விரைந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: