பாகிஸ்தானுடன் இன்று மீண்டும் பலப்பரீட்சை : பைனலுக்கு முன்னேற இந்தியா முனைப்பு

துபாய்: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் இந்த தொடரில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. லீக் சுற்றில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்திய இந்தியா, சூப்பர் 4 சுற்றின் முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது. ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் சற்று தடுமாறினாலும், பாகிஸ்தான் அணியுடன் நடந்த பரபரப்பான போட்டியில் அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டனர். தொடக்க வீரர்கள் ரோகித், தவான் இருவரும் நல்ல பார்மில் உள்ளனர். நடுவரிசையில் ராயுடு, டோனி, கார்த்திக் நம்பிக்கை அளிக்கின்றனர். புவனேஷ்வர், பூம்ரா வேகக் கூட்டணியும் அசத்தி வருகிறது. முன்னணி சுழற்பந்துவீச்சாளர்கள் சாஹல், குல்தீப் விக்கெட் வேட்டை நடத்தத் தவறிய நிலையில் கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா அபாரமாக செயல்பட்டு அணிக்கு வலு சேர்த்துள்ளனர்.

இந்த தொடரில் 2வது முறையாக பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா, தொடர்ச்சியாக 4வது வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேற வரிந்துகட்டுகிறது. அதே சமயம், லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணி களமிறங்குவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அனுபவ ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக் ஜொலித்து வருகிறார்.

இந்திய அணிக்கு எதிராக 43 ரன் எடுத்த அவர், ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில் கடைசி வரை உறுதியுடன் விளையாடி வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. எனினும், தொடக்க வீரர் பகார் ஸமான், இமான் உல் ஹக், பாபர் ஆஸம், சர்பராஸ் ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். முகமது ஆமிர் வேகம் பெரிதாக கை கொடுக்காத நிலையில், ஹசன் அலி மற்றும் உஸ்மான் கான் பந்துவீச்சையே பாகிஸ்தான் நம்பியுள்ளது.இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால், துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கும் இப்போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், அம்பாதி ராயுடு, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், தினேஷ் கார்த்திக், கலீல் அகமது.

பாகிஸ்தான்: சர்பராஸ் அகமது (கேப்டன்/ கீப்பர்), பகார் ஸமான், ஷான் மசூட், பாபர் ஆஸம், ஹரிஸ் சோகைல், இமாம் உல் ஹக், ஆசிப் அலி, சதாப் கான், முகமது நவாஸ், பாகீம் அஷ்ரப், ஹசன் அலி, முகமது ஆமிர், சோயிப் மாலிக், ஜுனைத் கான், உஸ்மான் கான், ஷாகீன் அப்ரிடி.

வங்கதேசம் - ஆப்கன் மோதல்

அபுதாபி ஷேக் சையது ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே சூப்பர் 4 சுற்றின் முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்ததால், பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

பி பிரிவில் ஆப்கானிஸ்தானுடன் மோதியபோது 136 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால், வங்கதேச அணி இப்போட்டியில் மிக கவனமாக விளையாடும். லீக் சுற்றில் இலங்கை மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தியதுடன், பாகிஸ்தானுக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து கடைசி வரை போராடியதால் ஆப்கன் வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். அந்த அணியின் இளம் ஆல் ரவுண்டர் ரஷித் கானை சமாளிப்பது வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கும். சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த போட்டியும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: