தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தல் முடிவுகள்... 25 உறுப்பினர்கள் தேர்வு

சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.  தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் 28ம்தேதி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள சுமார் 90 ஆயிரம் வக்கீல்களில் 54 ஆயிரம் வக்கீல்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றனர். இதில் 42 ஆயிரம் வக்கீல்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மொத்தம் 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுமார் 170 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த தேர்தலை நடத்தியது.

 தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 25ம்தேதி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் சி.எஸ்.அமல்ராஜ், ஆர்.சி.பால்கனகராஜ், பிரபாகரன், திமுக மூத்த வக்கீல் விடுதலை, உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், பாமக வக்கீல் கே.பாலு, மாரப்பன், ஐயப்ப மணி உள்ளிட்ட 25 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக பெண் வக்கீல் உறுப்பினராக வக்கீல் பிரிசில்லா பாண்டியன் தேர்வு செயப்பட்டுள்ளார்.   

 இவர்களில் தலைவர், துணை தலைவர், அகில இந்திய பார்கவுன்சில் உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் கடுமையான போட்டி நிலவுகிறது. குறிப்பாக தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேரில் சுமார் 8 பேர் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

 தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது, ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரத்தை புதுப்பிப்பது, வக்கீல்கள் மீது வரும் புகார்களை விசாரிப்பது, சட்டப்படிப்பு முடித்தவர்களை வக்கீல்களாக பதிவு செய்வது, வக்கீல்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்யும். தமிழ்நாடு பார்கவுன்சில் பிரதிநிதிகள் தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 90ஆயிரம் வக்கீல்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: