×

மழையும் ஏமாற்றியது: ஆந்திர தண்ணீர்வரத்தும் இல்லை முற்றிலும் வறண்டு கிடக்கும் பூண்டி ஏரி: சென்னை மாநகர மக்களின் தாகம் தீர்ப்பதில் சிக்கல்

சென்னை: பருவமழை பொய்த்ததாலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர்வரத்து இல்லாததாலும், பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு ஆங்காங்கே வெடிப்புடன் காட்சியளிக்கிறது. இதனால் சென்னை மாநகர  மக்களின் தாகத்தை தீர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை பொதுப்பணி துறையினரால் ₹65 லட்சம் மதிப்பில், கடந்த 1940ம் ஆண்டு பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கட்டும் பணி துவங்கியது. 16 பெரிய மதகுகளைக் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 3,231  மில்லியன் கன அடி. 34.98 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 138 அடியும், ஏரியின் நீர்மட்ட உயரம் 35 அடியாகவும் அமைக்கப்பட்டது.1944ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தை ஜூன் 14ம் தேதி அப்போதைய சென்னை மேயராக இருந்த ஆர்தர் ஹோப் திறந்து வைத்தார். தற்போது பூண்டி ஏரிக்கு 74 வயது. இந்த ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு  அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக தண்ணீர் பெறப்படுகிறது.

`பூண்டி ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீருக்காக, இணைப்பு கால்வாய் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.  இந்நிலையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர், முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால், ஏரியானது முற்றிலும் வறண்டு கிடக்கிறது. சுத்திகரிப்பு  நிலையத்துக்கு தண்ணீர் செல்ல இயலாமல் கால்வாயும் வறண்டு கிடக்கிறது. பூண்டி ஏரியானது 1944ம் ஆண்டு முதல் தற்போது வரை 74 ஆண்டுகளில், 15 ஆண்டுகள் முழு அளவு வறட்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக, 1948  முதல் 1952 வரை 5 ஆண்டுகள், 1969, 1974, 1983, 1987 முதல் 1991 வரை 5 ஆண்டுகள், 2000, 2013 என 15 ஆண்டுகள் பூண்டி ஏரி பூஜ்ய நிலை அளவிற்கு வறண்டுள்ளது. தற்போது வறட்சியினால் நடப்பாண்டு 16வது ஆண்டாக  முற்றிலும் வறண்ட காணப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு பாலம், பாலமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால், கால்நடைகளும், காப்புக்காட்டில் உள்ள விலங்குகளும் குடிநீரின்றி  வெளியேறி கிராமங்களுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிப்பதும் மிகவும் கடினம்’’ என்றார்.

நிலத்தடிநீர் குறைவால் குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் தர விவசாயிகள் எதிர்ப்பு
பூண்டி ஏரி வறண்டு காணப்படும்போது, சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்க பூண்டி ஏரியை சுற்றியுள்ள புல்லரம்பாக்கம், கைவண்டுர், காரணை, சிறுவானூர், வெள்ளியூர் உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய பம்ப்  ஷெட்களில் இருந்து, ஒப்பந்த அடிப்படையில், ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, குழாய்கள் மூலம் புழல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் அனுப்புவது வழக்கம். இதற்கென  மேற்கண்ட பகுதிகளில், நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கொள்ள, ஒரு மணி நேரத்துக்கு ₹42 வீதம் விவசாயிகளுக்கு பணம் தருவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஒப்பந்தம்  செய்வார்கள். இந்நிலையில், வறட்சி காரணமாக ஏற்கனவே நிலத்தடிநீர் குறைந்துவிட்டதால், தங்களது சம்பா விவசாயம் பாதிக்கும் என கூறி, விவசாயிகள் தண்ணீர் தர குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் மறுத்துவிட்டனர். இதனால்,  பூண்டி ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் வாரியம் கட்டியுள்ள நீர் உந்து நிலையங்கள் பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடக்கிறது.

ஆந்திர-தமிழக அரசின் ஒப்பந்தம் என்ன?
ஆந்திர-தமிழக அரசுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, 1983ஆம் ஆண்டு, தெலுங்கு கங்கைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., நீரை, தமிழகத்திற்கு ஆந்திர மாநிலம் வழங்க வேண்டும்.  ஜூலை மாதம் முதல், வினாடிக்கு 1000 கன அடிக்கு மிகாமல் அக்டோபர் மாதம் வரை தரவேண்டும். அதன்பின் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வினாடிக்கு 1000 கன அடிவீதம் திறந்து விட வேண்டும். இந்த  அடிப்படையில் தமிழக, ஆந்திர எல்லையான ஜீரோ பாயின்ட்டில் இரு மாநில நீர்வளத்துறை அதிகாரிகளும் நீர் திறப்பு அளவை சரிபார்ப்பர். இவ்வாறு, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும் அடுத்ததாக ஜனவரி முதல்  ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் அளிக்க வேண்டும். அந்த வகையில், ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்கவேண்டிய 8 டி.எம்.சி., தண்ணீரை இதுவரை ஆந்திர அரசு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The rain,water Complex dry ,solving thirst ,Chennai City
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...