ஆள்மாறாட்டம் செய்து பத்திரம் பதிவதை தடுக்க மீண்டும் வெப் கேமரா வைக்க டெண்டர்

* பதிவுத்துறை தலைமை நடவடிக்கை

* சார்பதிவு அலுவலகங்களில் சிடி கட்டணம் வசூலிக்க தடை

சென்னை: ஆள்மாறாட்டம் செய்து பத்திரம் பதிவதை தடுக்க மீண்டும் வெப் கேமரா வைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் முதல் இத்திட்டத்தை மீண்டும் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த பத்திரபதிவின் போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளை தடுக்க  பல்வேறு நடவடிக்கைகளை பதிவுத்துறை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பத்திரப்பதிவு நிகழ்வின் போதும் வெப் கேமரா வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் காட்சிகளை சிடியில்  பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தரப்படுகிறது.

இதற்காக, ஒவ்வொரு பதிவுக்கும் ₹50 சிடி கட்டணமாக வசூலிக்கப்பட்டு ரசீது தரப்படுகிறது. கேமரா மூலம் பதிவு செய்யும் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனம் மூலம்  செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் வெப் கேமரா ஆபரேட்டர்கள் ஊதியம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால், கடந்த சில மாதங்களாக சிடிக்கள்  வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.இருப்பினும், சிடிக்களுக்கான கட்டணம் மட்டும் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து சார்பதிவு அலுவலகங்களிலும் வெப் கேமரா இயங்கவில்லை என்று தெரிகிறது. இதனால், ஆள் மாறாட்டம்  மூலம் போலி ஆவணம் பதிவு செய்யப்படுவதை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பதிவுத்துறை ஐஜி குமரகுருபரனுக்கு ஏராளமான புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், வெப்கேமரா, ரிக்கார்டர், டிவிடி உள்ளிட்டவைகளை வைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. சார்பதிவு அலுவலகங்களில் இரண்டு இடங்களில்  வெப்கேமரா வைக்கப்படுகிறது. ஒன்று அலுவலகத்திற்கு வெளியிலும், மற்றொன்று பத்திரம் பதிவு செய்ய படம் பிடிக்க வசதியாகவும் வைக்கப்படுகிறது. இதற்காக கேமரா ஆபரேட்டர்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம்  நியமிக்கப்படுகின்றனர். இதன் மூலம் ஆள் மாறாட்டம் செய்து பத்திரம் பதிவு செய்வதை தடுக்க முடியும். வரும் டிசம்பரில் இந்த திட்டத்தை முழு வீச்சில் டிசம்பரில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது என்று பதிவுத்துறை  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: