செப்.9ல் நடைபெற்ற முதல் கட்ட முகாமில் 4 லட்சம் பேர் விண்ணப்பம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று 2வது கட்ட சிறப்பு முகாம்: தமிழகம் முழுவதும் 67,654 வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடு

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் இன்று 2வது கட்ட சிறப்பு முகாம் 67,654 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. 01.01.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. 1-09-2018 தேதிய நிலவரப்படி, தமிழகத்தில் 1-9-2018 முதல் 31-10-2018 வரை 2 மாதம் (செப்டம்பர், அக்டோபர்) வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்க்கவும்,  நீக்கவும், முகவரி மாற்றமும் செய்யலாம்.

அலுவலக நாட்களில், உள்ளாட்சி அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் காலை முதல் மாலை வரை வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரியிடம்  விண்ணப்பத்தை பெற்று பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.மேலும், அலுவலகம் செல்பவர்களுக்கு வசதிக்காக, 9.9.2018, 23.9.2018, 7.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தேர்தல்  ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல் சிறப்பு முகாம் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இந்த முகாமில் பெயர் சேர்க்க 3,05,241 பேரும், நீக்கம் செய்ய 20,423 பேர், திருத்தம் செய்ய 34,109 பேர், முகவரி மாற்றம் செய்ய 23,460  பேர் என மொத்தம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 233 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்நிலையில், 2வது கட்ட சிறப்பு முகாம் இன்று (23ம் தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் முழுவதும் உள்ள 67,654 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.  வாக்குச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

அக்.31 வரை அவகாசம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறும்போது, “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று நடைபெறும் சிறப்பு முகாமுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும்  ஊழியர்கள் இருப்பார்கள். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு இருக்கும். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பெயர், தற்போது வெளியாகியுள்ள வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று பார்த்து  தெரிந்து கொள்ளலாம். பெயர் இல்லையென்றால் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்களுக்கு வர முடியாதவர்கள் அலுவலக நாட்களில் வருகிற அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெறப்படும் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று  களஆய்வு செய்தபிறகு புதிய பட்டியலில் சேர்க்கப்படும். புதிய வாக்காளர் பட்டியல் 2019ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி வெளியிடப்படும். இந்த சிறப்பு முகாம்களை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் மற்றும்  வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கும் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகளும் மேற்பார்வையிடுவார்கள்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: