போக்குவரத்து மிகுந்த பகுதியில் அமைத்த சாலையோர வாகன நிறுத்துமிடம் மாயம்: புதிய திட்டத்தை வகுக்க பொது மக்கள் கோரிக்கை

சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் அமைக்கப்பட்ட சாலையோர வாகன நிறுத்துமிடங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டதாக பொதுமக்கள் குற்றம்  சாட்டுகின்றனர்.   சென்னையில் பெரும்பலான சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்‌குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் பொதுமக்கள் பலர் தங்களின் வாகனங்களை சாலையேரங்களில் நிறுத்திவிட்டு  செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலானது இன்னும் அதிகமாகிறது. இதை தடுக்க சென்னையின் முக்கிய சாலைகளின் ஒரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க மாநகராட்சி  நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 4,5,8,9,10 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் 90 இடங்களில் இது போன்ற வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு 6,12 மற்றும் 24  மணி நேரம் என்று மூன்று வகையாக பிரிக்கப்பட்டு கட்டணங்களும் நிர்ணயம் செய்யப்பபட்டன.

அதன்படி நான்கு சக்கரம் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்க  6 மணி நேரத்திற்கு ₹6 ம், 24 மணி நேரத்திற்கு ₹20 ம் வசூலிக்கப்படுகிறது. லாரிக்கு 12 மணி நேரத்திற்கு ₹25 ம், 24 மணி நேரத்திற்கு ₹50 ம், டெம்போவிற்கு 12  மணி நேரத்திற்கு ₹15 ம், 24 மணி நேரத்திற்கு ₹30 ம், தனியார் பேருந்துகளுக்கு 24 மணி நேரத்திற்கு ₹50 ம், டிராக்டர் மற்றும் டிரைலர் வாகனங்களுக்கு 24 மணி நேரத்திற்கு ₹15 ம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு மற்றும்  மூன்று வாகனங்களுக்கு எந்த வித கட்டணமும் விதிக்கப்படவில்லை.இப்படி அமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்படி முன்னாள் ராணுவ வீரர்கள் நல ஆணையம் மூலம் இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும்.  அதன் அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வாகன நிறுத்துமிடங்களை பாரமரிப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும். அவர்களுக்கு கொடுக்கப்பட்டதை தவிர்த்து மீதம் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் தனியாருக்கு  வழங்கப்படும். இப்படி வழங்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் இப்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எடுத்துக்காட்டாக ராயபுரம் மண்டலத்தில் கமிஷனர் ஆணையர் அலுவலக சாலையிலும்,  9 ஆவது மண்டலத்தில் ஒயிட்ஸ் சாலையிலும் இது போன்ற  நிறுத்துமிடங்கள் இருப்பதாக மாநகராட்சி இணையதளத்தில்  கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலைகளில் அதுபோன்ற ஒன்று இருந்தற்கான அடையாளமே இல்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.இது தொடர்பாக மேலும் அவர்கள் கூறியதாவது :  ஒரு சாதாரண மழை பெய்தாலே சென்னையின் சாலைகள்  குண்டும் குழியுமாக மாறிவிடுகின்றன. வாகன நிறுத்துமிடங்களுக்காக சாலையின் ஓரத்தில் போடப்பட்ட கோடுகள்  எல்லாம் அழிந்துவிட்டன. நாளுக்குநாள் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பலர் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு செல்வதுதான்.இதை சரி செய்ய சென்னைக்கொன்று  ஒரு புதிய வாகன நிறுத்திமிட திட்டத்தை தாயரிக்க வேண்டும். நிறைய இடங்களில் பல் அடுக்கு வாகன நிறுத்துமிடங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திட்டம் தோல்வி

சாலையோர வாகன நிறுத்துமிட திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தி.நகரில் பல் அடுக்கு வாகன நிறுத்துமிடம்  அமைக்கப்படவுள்ளது. சென்னையில் 6000 வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் உள்ளது. இதை ஒழுங்குப்படுத்த வாகன நிறுத்துமிட மேலாண்மை முறை வகுக்கப்படவுள்ளது.  தனியார் பங்களிப்புடன் இந்த திட்டத்தை  நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது” என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: