கத்தார் விமானத்தில் இயந்திர கோளாறு : விமானி சாமர்த்தியத்தால் 261 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சென்னை: கத்தார் சென்ற விமானத்தில் திடீரென ஏற்பட்ட பழுதை உடனடியாக கண்டுபிடித்ததால், 261 பேர் உயிர் தப்பினர். இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டது. அந்த, விமானத்தில், 254 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் ஓட தொடங்கியபோது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இந்நிலையில் விமானத்தை தொடர்ந்து இயக்கி வானில் பறக்க செய்வது, மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என உணர்ந்த விமானி, அவசர அவசரமாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார். மேலும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, 2 இழுவை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ஓடுபாதையில் பழுதடைந்து நின்ற விமானத்தை இழுத்து வந்து, புறப்பட்ட இடத்துக்கே கொண்டு சென்று நிறுத்தினர். விமானத்தில் சிறிய அளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்து, 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.இதைதொடர்ந்து  விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக சரி செய்தும், பழுதை சீரமைக்க முடியவில்லை. இதனால், அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  பின்னர், அதில் இருந்த 254 பயணிகளும், சென்னை நகரில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த விமானம் பழுது சரி செய்யப்பட்டு, இன்று அதிகாலை தோஹா புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. உரிய நேரத்தில் பழுதை கண்டுபிடித்து விமானி துரித நடவடிக்கை எடுத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 261 பேர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் நேற்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: