வனத்துறை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட ரவிகாந்த் உபாத்யாயாவை மீண்டும் நியமிக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் வனத்துறைக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. வன ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ரவிகாந்த் உபாத்யாயா வனத்துறை தலைவராக பொறுப்பேற்ற பிறகு வன ஆக்கிரமிப்பை முற்றிலுமாக தடுத்து நிறுத்தியதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தனியார் நிறுவனங்களும், செல்வாக்குள்ள தனிநபர்களும் தமிழக அரசுக்கு கொடுத்த  அழுத்தம் காரணமாகவே உபாத்யாயா மாற்றப்பட்டதாக வனத்துறையினரே குற்றஞ்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, வனத்துறையில் காலியாக உள்ள 40 சதவீத பணியிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் 900 வனக்காவலர்கள் மற்றும் 158 வனச்சரகர்களை நியமிக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டார். இதற்கான ஆள் தேர்வில் முறைகேடு செய்ய திட்டமிட்டிருந்த ஆட்சியாளர்கள் அதற்கு உபாத்யாயா தடையாக இருப்பார் என்பதால்தான் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வனத்துறையில் ஊழல் அல்லது மோசடியை செய்ய ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருக்கிறார்களோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. வனத்துறை தலைவர் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, ரவிகாந்த் உபாத்யாயாவை மீண்டும் வனத்துறை தலைவராக நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: