தாமிர தாது கொட்டப்பட்ட இடத்தில் விசாரணை : ஸ்டெர்லைட் ஆலையில் நீதிபதி குழு ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர தாது கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின் போது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை தூத்துக்குடி வந்தனர். அவர்கள் புதுக்கோட்டை உப்பாற்று ஓடை அருகே கொட்டப்பட்டுள்ள தாமிர தாது கழிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினருடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறிது நேரம் பேசினார். பின்னர் அவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தேசிய பசுமை தீர்ப்பாய குழு வருகையையொட்டி தூத்துக்குடி - நெல்லை நான்கு வழிச்சாலையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டு இருந்தது. புதுக்ேகாட்டை பாலப்பகுதியில் போலீசார் கைகோர்த்தபடி பாதுகாப்புக்கு நின்றிருந்தனர்.

ஆய்வுக்குழு வருகையை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பத்திரிகையாளர்களை உள்ளேவிட போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உயரதிகாரிகள் உத்தரவின்பேரில் வைகோ உள்ளிட்ட சிலரும், பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்பட்டனர். 6 வாரத்தில் அறிக்கை: முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் கூறியதாவது:  ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. முதலில் ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்யப்படும். நாளை (இன்று) காலை 8 மணிக்கு ஆலையில் ஆய்வு செய்யப்படும். நண்பகல் 11.30 மணியளவில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். நாளை மறுதினம் (திங்கள்) சென்னையில் முக்கிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது. தொடர்ந்து ஆய்வு தொடர்பான அறிக்கை 6 வார காலத்திற்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கப்படும்’ என்றார்.

தண்டோரா மூலம் அறிவிப்பு:

தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அளித்த பேட்டி: ஆய்வு குழுவினர் இன்று (ஞாயிறு) காலை 8 மணிக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து 11 மணிக்கு தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கின்றனர். அப்போது, பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் நேரடியாக தங்கள் கோரிக்கையை மனுவாகவோ, வாய்மொழியாகவோ தெரிவிக்கலாம். ஏதேனும் ஆதாரங்கள் இருந்தாலும் குழுவிடம் சமர்ப்பிக்கலாம். இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களில் ஆட்டோக்கள் மூலமும், தண்டோரா மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: