ரபேல் விமான பேரத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் : மோடி மீது ராகுல் சரமாரி புகார்

* கடந்த 2012ம் ஆண்டு ஐ.மு. கூட்டணி ஆட்சியில் ஒரு ரபேல் விமானத்தை ரூ.590 கோடிக்கு வாங்க விலை நிர்ணயம் செய்யப்பட்டு, மொத்தம் 126 விமானங்கள் வாங்க முடிவு செய்ய்பட்டது.

* பா.ஜ ஆட்சிக்கு வந்தவுடன் 36 விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்க கடந்த 2015ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

* 3 ஆண்டில் ஒரு  விமானத்தின் விலை ரூ.1100 கோடி உயர்த்தப்பட்டது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி: ‘‘ரபேல் போர் விமான பேரத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது’’ என்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ‘ரபேல் போர் விமானத்தை இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்க்கும்படி இந்திய அரசுதான் பரிந்துரைத்தது’ என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறிய கருத்தால், ரபேல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க, காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அப்போது இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. பாஜ ஆட்சிக்கு வந்ததும், இந்த ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டியது. இருப்பினும், 126 விமானங்களை வாங்குவதற்கு பதிலாக, 36 விமானங்களை மட்டுமே வாங்க முடிவு செய்தது. இதற்காக, பிரான்சுடன் ரூ.58 ஆயிரம்  கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 10ம்  தேதி, அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவை சந்தித்த பிறகு பிரதமர் மோடி இந்த  அறிவிப்பை வெளியிட்டார்.

சில விமானங்களை பறக்கும் நிலையில் வழங்க வேண்டும் என்றும், மற்ற விமானங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்திய நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே தயாரித்து  கொடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் பிரான்சுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, பிரான்சில் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனம்,  இந்தியாவின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இதனால், அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு (எச்ஏஎல்) ஒப்பந்தத்தை வழங்காமல், முன் அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்குவதா என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.

மேலும், இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ‘நஷ்டத்தில் தவிக்கும் அனில் அம்பானிக்கு உதவி செய்வதற்காகவே, அவருடைய நிறுவனத்துக்கு ரபேல் ஒப்பந்தத்தை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்’ என்றும் கூறி வருகிறார். ஆனால், மத்திய அரசு இதை மறுத்து வருகிறது. ‘கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபடும் நிறுவனத்தை தேர்வு செய்ததில் மத்திய  அரசின் பங்கு எதுவும் இல்லை’ என அது விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, மேலும், ரபேல் தவிர மேலும் 100 போர் விமானங்கள் வாங்கவும் மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்காவின் எப்-16, பிரான்சின் ரபேல் உட்பட பல விமான நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.  

இந்நிலையில், ‘மீடியாபார்ட்’ என்ற பிரெஞ்சு பத்திரிக்கையில் ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து, அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டி நேற்று முன்தினம் வெளியானது. அதில், ‘‘ரபேல் போர் விமானத்தை தயாரிக்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் கூட்டு தயாரிப்பில் ஈடுபட ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்தை தேர்வு செய்யும்படி இந்திய அரசுதான் கூறியது.

இந்திய நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு பிரான்சுக்கு அளிக்கப்படவில்லை. நமக்கு கொடுக்கப்பட்ட நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்தோம். அதன் பின்பே, டசால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது’ என கூறியிருந்தார்.ஹாலண்டேவின் இந்த கருத்து, மத்திய அரசு தெரிவித்த கருத்துக்கு முரண்பாடாக இருந்தது. டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையிலும், ‘மேக் இன் இந்தியா திட்டபடி, ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்தை பங்குதாரராக சேர்க்க முடிவு செய்தோம்’ என தெரிவித்துள்ளது.

இந்த கருத்துகளால் ரபேல் ஒப்பந்தம் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து, ராணுவ அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்,  ‘ரபேல் தயாரிப்பில் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்தை கூட்டு நிறுவனமாக சேர்க்கும்படி இந்தியா வலியுறுத்திதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியதாக வெளியான தகவல், சரி பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பான வர்த்தக முடிவில் மத்திய அரசோ, பிரான்ஸ் அரசோ எதுவும் கூறவில்லை. ஹாலண்டே பேட்டியை வைத்து இந்த விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுகின்றன. ரபேல் ஒப்பந்தத்துக்கு முன்பே, ஹாலண்டேவின் பங்குதாரர் ஜூலி கேயட் தயாரிக்கும் சினிமாவில் ‘ரிலையன்ஸ் என்டெர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால்தான் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதா என ஹாலண்டேவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.  எனவே, அவருடைய அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், எந்த நிர்ப்பந்தத்தின் பெயரில் அவர் அவ்வாறு கூறினார் என்பது தெரியவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹாலண்டே கருத்து குறித்து ராகுல் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து ராணுவத்தின் மீது ரூ.1.3 லட்சம் கோடி ஊழல் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியுள்ளனர். இதன் மூலம், தியாகம் செய்த நமது வீரர்களின் ரத்தத்தை மோடி அவமதித்து விட்டார்.  இது வெட்கக்கேடான செயல். இந்தியாவுக்கு மோடி துரோகம் செய்து விட்டார்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘ஹாலண்டேவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் பிரதமர் மவுனம் காப்பது ஏன்?’’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு கருத்து அடிப்படையில் நாடு இயங்கக் கூடாது:

டெல்லி சிரிபோர்ட் ஆடிட்டோரியத்தில் பிரபல கல்வியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நேற்று பேசிய ராகுல், ‘‘கல்வித்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அரசு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசு நிறுவனங்களுக்கு அதிக பணம் கொடுத்து வலுப்படுத்த வேண்டும். உங்கள் மீது ஒரு கருத்து திணிக்கப்படுவதாக நீங்கள் உணர்கிறீர்கள். இந்த உணர்வு உங்களுக்கு மட்டுமல்ல. நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழிலாளர்கள், விவசாயிகளின் இதயத்திலும் உள்ளது. ஒரு கருத்து, ஒரு கொள்கை அடிப்படையில் நாடு இயங்கக் கூடாது. மக்கள் பேசி ஆலோசிக்க வேண்டும். அதுதான் நாட்டின் பலம். 3 ஆயிரம் ஆண்டு இந்திய வரலாற்றை பார்த்தால், நாம் வெற்றி பெற போகிறோம்; இழக்கப் போவதில்லை என்பது தெரியும். உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உட்பட அனைத்து அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் கொள்கைப்படி இயக்கப்படுகின்றன’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: