கேரள கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் ஜலந்தர் பிஷப் பிராங்கோ அதிரடி கைது: 3 நாள் விசாரணைக்கு பின் நடவடிக்கை

திருவனந்தபுரம்: ேகரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் ஜலந்தர் பிஷப் பிராங்கோ 3 நாள் விசாரணைக்கு பின்னர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக கடந்த ஜூன் 28ம் தேதி ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் மீது அதிரடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், பிஷப்புக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை திரட்டினர். இதையடுத்து அவரிடம் நேரடியாக விசாரித்து வாக்குமூலம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பிஷப் பிராங்கோ கடந்த 19ம் தேதி கேரள போலீசில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் கொச்சி திருப்பூணித்துறாவில் உள்ள குற்றப்பிரிவு எஸ்பி அலுவலகத்தில் வைத்து கோட்டயம் எஸ்பி ஹரிசங்கர் மற்றும் வைக்கம் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் விசாரணை நடந்தது. 2 நாட்களாக போலீசார் பிஷப்பிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். நேற்று 3வது நாளாக பிஷப் விசாரணைக்கு ஆஜரானார். தொடர் விசாரணையின் போதும் தான் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்யவில்லை என்று பிஷப் பிராங்கோ போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் கூறியது அனைத்தும் பொய் என பல ஆதாரங்களை  முன் வைத்து போலீசார் உறுதி செய்தனர். இதனால் பிஷப்பால்  எந்த பதிலும் கூற முடியவில்லை.

நேற்று காலை பிஷப் பிராங்கோ சில தகவல்களை போலீசாரிடம் கூறினார். இதை உறுதி செய்வதற்காக கோட்டயம் வாகத்தானம் இன்ஸ்பெக்டர் குரவிலங்காடு மடத்திற்கு சென்று சுமார் 40 நிமிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையிலும் பிஷப் கூறியது பொய் என தெரியவந்தது. பிஷப்புக்கு எதிராக போலீசார் திரட்டிய 10க்கும் மேற்பட்ட வலுவான ஆதாரங்களை  முன் வைத்தனர். அதை பார்த்த பிஷப் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதற்கு அவரால் எந்த விளக்கமும் அளிக்க முடியவில்லை.  நேற்று மதியமே பிஷப்பை கைது செய்வதாக போலீசார் அவரிடம் கூறினர். இதன் பிறகு போலீசார் ரிமாண்ட் அறிக்கை தயாரித்து ஒப்புதலுக்காக ஐஜி விஜய் தாக்கரேயின் பார்வைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அதை பரிசீலித்த பின்னர் அதை சட்டத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்தார். அதை பரிசீலித்த சட்டத்துறை இயக்குநர் பிஷப்பை கைது செய்ய எந்த தடையும் இல்லை என தெரிவித்தார்.

இதையடுத்து மாலை 5 மணியளவில் பிஷப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக திருப்புணித்துறா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனைக்கு பின்னர் பிராங்கோ பாலா மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையில் முரண்டு: பிஷப் பிராங்கோவிடம் 2வது நாள் விசாரணையில், புகார் அளித்த கன்னியாஸ்திரி பாவமன்னிப்பு கேட்டது குறித்தும் கேட்கப்பட்டது.

பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரி, கடந்த 2016 செப்டம்பர் மாதம் பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடியில் அமைந்துள்ள ஒரு தியான மையத்திற்கு சென்று தான் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கூறி பாவமன்னிப்பு கேட்டுள்ளார்.

இதை அவர் போலீசில் வாக்குமூலம் அளிக்கும் போது கூறியிருந்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அட்டப்பாடி சென்று தியான மையத்தில் பாதிரியாரை சந்தித்து கன்னியாஸ்திரி பாவமன்னிப்பு கேட்டது தொடர்பாக விசாரணை நடத்தினர். ஆனால் அந்த பாதிரியார் பாவமன்னிப்பு கேட்ட விவரங்களை வெளியே கூற முடியாது என தெரிவித்துவிட்டார்.  இதுதொடர்பாக நேற்று நடந்த விசாரணையின் போது, அதிகாரிகள் பிஷப்பிடம் கேட்டனர். அப்போது பிஷப், பாவமன்னிப்பு கேட்டதை வெளியே சொல்லக்கூடாது. அதை வழக்கில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி முரண்டு பிடித்தார்.

86வது நாளில் கைது: கடந்த ஜூன் 28ம் தேதி பிஷப் பிராங்கோ மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் அளித்து 86வது நாளில் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதற்கிடையே பிஷப்பை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்றே பாலா நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான முயற்சியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கைதாகும் முதல் பிஷப்

பாலியல் பலாத்கார வழக்கில் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ராபின் என்ற பாதிரியார் கண்ணூரில் கைது செய்யப்பட்டு, கடந்த ஒரு வருடமாக சிறையில் இருந்து வருகிறார். பிராங்கோ நேற்று கைது செய்யப்பட்டார். பாலியல் புகாரில் கத்தோலிக்க பிஷப் ஒருவர் கைது செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: