காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டகாசம் கடத்தப்பட்ட 3 போலீசார் சுட்டுக்கொலை: சடலத்தை சாலையில் வீசிய கொடூரம்

காஷ்மீர்: காஷ்மீரில் 3 போலீசாரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். இதன் காரணமாக, இம்மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ள தீவிரவாதிகளை வேட்டையாட, பாதுகாப்பு படைகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது. எனினும், தீவிரவாதிகளின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. தற்போது காவல்துறையை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். காவல்துறையில் பணியாற்றுவோர் ராஜினாமா செய்ய வேண்டும் என சமீப நாட்களாக தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.  ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி ரியாஸ் நாய்கோ உள்ளுர் போலீசார், குறிப்பாக சிறப்பு காவல் படை அதிகாரிகள் பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர்களை அரசு பயன்படுத்திக் கொள்வதாகவும் எச்சரித்து வீடியோ வெளியிட்டு வருகிறான்.

கடந்த 30ம் தேதி காவல் துறையில் பணியாற்றி வருவோரின் குடும்பங்களை சேர்ந்த 8  பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  இந்த கடத்தல் சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி ரியாஸ் நாய்கோ  பொறுப்பேற்று 12 நிமிட வீடியோவை வெளியிட்டு இருந்தான். இந்நிலையில்ல  காஷ்மீரில் நேற்று 3 போலீசாரை தீவிரவாதிகள் கடத்தி சென்று சுட்டுக் கொன்ற  சம்பவம் நடந்துள்ளது. சோபியான் மாவட்டத்தை சேர்ந்த கப்ரான், ஹிபோரா கிராமங்களை சேர்ந்த 2 போலீசாரை நேற்று காலை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதேபோல், படாகந்த் கிராமத்தில் ஒரு போலீசை தீவிரவாதிகள் வாகனத்தில் கடத்தினர். அப்போது, கிராம மக்கள் அவர்களை விரட்டி சென்றுள்ளனர். கடத்தப்பட்ட நபரை விடுவிக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களை மிரட்டிய அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆற்றை கடந்த அவர்கள் பின்னர் 3 போலீசாரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்நிலையில், கொல்லப்பட்ட 3 போலீசாரின் சடலங்களும் கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது. தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த நிசார் அகமது, ரயில்வேயில் பணியாற்றி காவலராக இருந்தபிர்தோஸ் அகமது, குல்காம் காவல் நிலையத்தை சேர்ந்த குல்வாந்த் சிங் என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஐஜி ஸ்வயாம் பிரகாஷ் கூறுகையில், “நாங்கள் சக ஊழியர்கள் 3 பேரை இழந்துள்ளோம். இவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். சம்பவத்துக்கு காரணமானவர்களை விரைவில் சட்டத்தின் முன் கொண்டு வருவோம்” என்றார்.

காவலர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காஷ்மீரில் மொகரத்தை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அதையும் மீறி முஸ்லிம்கள் பல இடங்களில் மொகரம் ஊர்வலம் நடத்தினர். இந்த பரபரப்பான நிலையில்தான்,் 3 போலீசாரை தீவிரவாதிகள் கடத்தி கொன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளை வேட்டையாட, பாதுகாப்பு படைகள் முழுவீச்சில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

6 போலீசார் ராஜினாமா?

காஷ்மீரில் போலீசார் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது அல்லது சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யுள்ளனர். ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக வீட்டில் இருந்து போலீசாரை கடத்தி சென்று சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இது காவல்துறையில் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, நேற்று 6 போலீசார் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. இதில், 2 பேர் ராஜினாமா செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளனர். ஆனால், போலீசார் யாரும் ராஜினாமா செய்யவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போலீசார் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. இது, திட்டமிட்டு பரப்பப்படும் சதி. பொய்யான பிரசாரமாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

5 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பண்டிப்புரா மாவட்டத்தில் உள்ள சம்ப்ளார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே தீவிரவாதிகள் 5 பேர் நேற்று மாலை ஊடுருவினர். இவர்கள் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளுக்கு செல்ல முயன்றனர். அவர்கள் மீது  போலீசார் நடத்திய தாக்குதலில் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில் இவர்கள் 5 பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: