நடிகர் விஜயகுமாரின் பங்களா அபகரிப்பு அடியாட்கள் உள்பட 7 பேர் கைது

ெசன்னை: நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீட்டை அபகரிக்க முயன்ற வழக்கில், அடியாட்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர், 19வது தெருவில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், இந்த பங்களாவை விளம்பர ஷூட்டிங்கிற்காக அவரது மூத்த மகள் வனிதா 3 நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால், அதன் பின் பங்களாவை காலி செய்யவில்லை.  இதற்கிடையே, விஜயகுமார் பங்களாவ காலி செய்ய வனிதாவிடம் கேட்டுள்ளார். ஆனால் காலி செய்ய மறுத்து, ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். போலீசார்  வனிதாவிடம் விசாரித்தனர். அப்போது வனிதா, ‘இது என்னுடைய வீடு. நான் காலி செய்ய மாட்ேடன்,’ என்று கூறி  வாக்குவாதம் செய்தார். அதற்கு போலீசார் ‘இந்த வீடு உங்களுக்கு சொந்தமானது என்றால் அதற்கான ஆவணங்களை கொண்டுவந்து காட்டுங்கள்’ என கூறினர். ஆனால், அவர் எந்த ஆவணத்தையும் போலீசாரிடம் காண்பிக்கவில்லை.

இதையடுத்து, அவரை அந்த வீட்டிலிருந்து வெளியேறும்படி நேற்று முன்தினம் இரவு போலீசார் வனிதாவுக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆத்திரமடைந்த வனிதா தனது அடியாட்களுடன் சேர்ந்து பங்களாவில் இருந்த அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினார். தடுத்த போலீசார் மற்றும் பொதுமக்களையும் தாக்க முயன்றுள்ளனர்.

எனவே, தாக்குதலில் ஈடுபட்ட வனிதா மற்றும் அவரது நண்பர்களான கோடம்பாக்கம் நரேந்திரன், ஆண்ட்ரூஸ், வடபழனி ஜோசப் மனோஜ், அடியாட்களான சைதை சத்தியசீலன், திருவேற்காடு பாலா, நெற்குன்றம் தியாகராஜன், காஞ்சிபுரம் மணிவர்மா 8 பேரை அங்கிருந்து வெளியேற்றி, அனைவரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். ஆனால், புறப்படும் நேரத்தில் வனிதா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, பிடிபட்ட 7 பேர் மீது, அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

பெண் என்றும் பாராமல் அடித்து காயப்படுத்தினார் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் மீது நடிகை வனிதா பரபரப்பு புகார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை வனிதா நேற்று அளித்த புகார்: என் அம்மாவுக்கு சொந்தமான வீட்டில் நான் தங்கி இருந்த போது, தந்தை விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி தூண்டுதலின் பெயரில் என்னை வெளியேற்ற மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நான் வீட்டை அபகரிக்கவில்லை.   மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், ஒரு பெண் என்றும் பாராமல் அடித்து காயப்படுத்தி வெளியேற்றினார். இதனால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

என்னை 13 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டனர். குடும்பத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறேன். என் தாய் வீட்டில் தங்குவதற்கு கூட எனக்கு உரிமை இல்லையா.. என்னை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: