பொது இடங்களில் கட்சிக்கொடி நட தடை விதிக்கக்கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விதிமுறைகளுக்கு முரணாக பொது இடங்களில் கட்சிக்கொடி கம்பங்களை நடுவதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழகம் முழுவதும் சாலையோரம், பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில் குழிதோண்டி அரசியல் கட்சிகள் தங்களது கொடியை நிரந்தரமாக நட்டு வருகிறார்கள். இந்த கொடிகளுக்காக மேடை அமைப்பதற்காக டிரில்லிங் மெஷின் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் குழிதோண்டும்போது தொலைபேசி கேபிள், மின் இணைப்பு கேபிள் போன்றவை பாதிக்கப்படுகிறது. இதனால், தொலைபேசி, மின்சார சேவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

மின் கேபிளில் சேதம் ஏற்பட்டு தொழிலாளர்கள் பலர் மின்சாரம் தாக்கி பலியாகிறார்கள்.   அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால், சாலையோரம் ஏராளமான கொடிகளை நடுகின்றனர். இந்த குழி தோண்டுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவதும் இல்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதும் இல்லை. சட்டவிரோதமாகத்தான் அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளை நட்டு வருகிறார்கள்.  கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடிகளை எல்லாம் அகற்றும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் அரசியல் கட்சி கொடிகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

எனவே, பொது மக்களுக்கு தொந்தரவையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் கொடிகளை நிரந்தரமாக நடுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 4 வாரத்திற்குள் பதில் தருமாறு தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: