தீபாவுடன் சேர்த்து வையுங்கள்: கமிஷனர் அலுவலகத்தில் டிரைவர் ராஜா மனு

சென்னை: மாதவன் தூண்டுதலில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவு மற்றும் மிரட்டல் விடுத்து வருவதால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தீபா கார் ஓட்டுனர் ராஜா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தி.நகர் சிவஞானம் தெருவை சேர்ந்த  தீபா கார் ஓட்டுனர் ராஜா நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

ஜெ.தீபாவுக்கு குடும்ப நண்பர் என்ற முறையில் பாதுகாப்பாக இருந்து வருகிறேன். நான் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். தீபாவுக்கு உறுதுணையாகவும், பாதுகாவலராகவும் இருந்து வருகிறேன்.

பேரவையில் கிளை பதவி முதல் மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைத்து பதவிகளுக்கும் கடுமையான போட்டி இருந்தது. அதன் காரணமாக சில பேரவையின் முக்கிய பொறுப்பு வகித்த குறிப்பிட்ட சிலர் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் தூண்டுதலில் ஜெ.தீபாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இதனால் அவர்கள் பேரவையின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், தீபா கணவர் மாதவன் மற்றும் சிலர் என் மீது காழ்ப்புணர்ச்சியும் விரோதமும் கொண்டு என் உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தனர். அதை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி சட்டத்துக்கு புறம்பாகவும், தவறான அவதூறு விமர்சனங்கள் வைத்து வந்தனர். செல்போனிலும் மற்றும் நேரடியாகவும்  என்னை ஒழித்துக்கட்டி விடுவதாகவும் அச்சுறுத்தி வந்தனர்.

இதுபோன்ற கடுமையான விமர்சனங்களுக்கு நான் உட்பட்டதால் பேரவை மற்றும் கழகத்தின் எந்த பணிகளையும் செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் தீபாவுக்கு ஒரு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுத்தி அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகின்றனர். எனவே, எனக்கு பாதுகாப்பு வழங்கியும், தீபாவுக்கு பாதுகாப்பு அரணாக நான் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: