புழல் சிறையில் அதிரடி சோதனை கைதிகளிடம் 4 செல்போன் பறிமுதல்: அதிகாரிகள் தீவிர விசாரணை

சென்னை: புழல் சிறையில் நடந்த அதிரடி சோதனையில் கைதிகளிடம் இருந்து 4 செல்போன், சிம்கார்டு மற்றும் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் மகளிர் பிரிவு என 3 சிறை வளாகங்கள் உள்ளன. இங்கு 150 பெண்கள் உள்பட 2000க்கும் மேற்பட்ட கொலை குற்றவாளிகள், தீவிரவாதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவது போன்று 250க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. புகைப்படங்களில் நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் அறைகள் போன்று திரைச்சீலைகள் அமைத்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. கட்டில்கள், உயர்ந்த சொகுசு மெத்தை மற்றும் தலையணைகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. ஓட்டல்களில் இருந்து உயர்தர சுடச்சுட அறுசுவை உணவு வகைகள், கைதி   மற்ற கைதிகளுடன் செல்போனில் செல்பி எடுத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதையடுத்து சிறைத்துறை டிஜிபி அசுதோஷ் சுக்லா, டிஐஜி கனகராஜ் மற்றும் உயரதிகாரிகள் புழல் சிறைக்குள் கடந்த 13ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அல் உமா பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டு இருந்த 18 அறைகளில் 18 டிவி, 3 எப்எம் ரேடியோ கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் புழல் சிறை தண்டனை பிரிவில் அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டபோது கொலை வழக்கில் திருநெல்வேலி போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐயப்பன் (32) என்பவரிடம் 2 செல்போன், 2 சிம் கார்டு மற்றும் 2 பேட்டரிகள் இருப்பது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கொலை வழக்கில் திருவாரூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளிக்கரணையை சேர்ந்த குணசேகரன் (30) என்பவரிடம் இருந்து 2 செல்போன்கள், 2 சிம் கார்டு மற்றும் 2 பேட்டரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புழல் போலீசில் சிறைத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் ஐயப்பன் என்ற கைதி சிறைத்துறை துணை தலைவர் முருகேசன் வீட்டில் தோட்ட வேலை செய்து வந்தது, முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: