முதல்வர், அமைச்சர் பதவி விலகக் கோரி நவ.9ம் தேதி கவர்னரிடம் மனு: மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு: அமைச்சர்கள் தலைமையில் மணல் கொள்ளை என குற்றச்சாட்டு

சென்னை: மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர் மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலகக் கோரி நவம்பர் 9ம் தேதி கவர்னரிடம் பேரணியாக சென்று மனு அளிக்க உள்ளதாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து, கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு கலப்பட மணலை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு செயற்கையான மணல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் அமைச்சர்களின் தலைமையில் மணல்கள் கடத்தப்படுகிறது. இதை தடுக்க அரசு உயர் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் விற்பனையில் கோடிக்கணக்கான ஊழல் நடக்கிறது.

எம்-சாண்ட் தயாரிக்க 24 நிறுவனங்கள் மட்டுமே அரசு அனுமதியுடன் செயல்படுகிறது. ஆனால், சரியான எம்-சாண்ட் தயார் செய்யாதது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித ஆய்வையும் செய்வது இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 24 கலப்பட மணல் லாரிகள் திருவள்ளூர், திருவெற்றியூரில் பிடிபட்டதே இதற்கு சான்றாகும். இதனால், 20 முதல் 25 ஆயிரம் கோடி வரையில் வருடத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில்தான் தனியார் மற்றும் புறம்போக்கு நிலங்களில் அதிக அளவில் சவுடு மணல் அரசு ஒப்புதல் பெற்று குவாரிகள் செயல்படுகிறது. இதில் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெரும்பங்கு உள்ளது.

எனவே, பொதுப்பணித்துறை அமைச்சரான முதல்வரும், கனிம வளத்துறை அமைச்சரும் உடனடியாக பதவி விலக வேண்டும். மணல் குறித்த ஊழலை விசாரிக்க சகாயம் ஐ.ஏ.எஸ் மற்றும் பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். மணல் கடத்தல்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எனவே, கலப்பட மணலை ஊக்குவிக்கும் பொதுப்பணித்துறை அமைச்சரான முதல்வர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 9ம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று கவர்னரிடம் மனு அளிக்க உள்ளோம். இதேபோல், தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: