விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் மலேசிய மணல் தீர்ந்தது

சென்னை: மலேசிய மணல் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. தனியார் நிறுவனம் ஒன்று, மலேசியாவில் இருந்து 55 ஆயிரம் டன் மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்தது. இந்த மணலை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது. மேலும் தனியார் மூலம் மணல் விற்பனை செய்யக்கூடாது, பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற புதிய விதி வகுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த தனியார் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கின் பேரில் மலேசிய மணலை விற்பனை செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.மேலும், தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மணலுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து 3 கட்டமாக தனியார் நிறுவனத்துடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் மணல் விலை நிர்ணயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றமே ஒரு யூனிட் மணல் ரூ.9,990க்கு விற்பனை செய்யலாம் என அறிவுறுத்தியது. தொடர்ந்து மணல் விற்பனை செய்து தனியார் நிறுவனத்திடம் அதற்கான தொகையை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் மணல் விற்பனைக்கான முன்பதிவு தொடங்கியது. இந்த மணலை டிஎன்ஸ்டேட் இணைய தளத்திலும் மொபைல் ஆப் மூலமும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி முன்புதிவு செய்யலாம். முதல் கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. முதலில் பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் மணல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முன்பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் மணல் விற்று தீர்ந்தது. இதனால், மணலுக்காக காத்திருந்தவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் புக்கிங் செய்தவர்களுக்கு இன்னும் 3 நாட்களில் மணல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அடுத்த வாரத்தில் இருந்து 44 ஆயிரம் யூனிட் மணலை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே, மலேசியாவில் இருந்து 57 ஆயிரம் டன் மணல் இன்று காலை சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்துக்கு கப்பல் மூலம் வருகிறது. அந்த மணல் செட்டிநாடு பன்நோக்கு சரக்கு முனையத்தில் இறக்கப்படுகிறது. 3 நாட்களுக்கு பிறகு இந்த மணலும் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: