வெளிநாடுகளில் 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் இ-டெண்டர் வெளியிட்டது தமிழக மின்வாரியம்: அனல்மின் நிலையங்கள் மூடப்படுவதை தடுக்க நடவடிக்கை

சென்னை: வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் இ-டெண்டர் வெளியிட்டுள்ளது. தமிழக மின்வாரியத்துக்கு சொந்தமாக தூத்துக்குடி, வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இங்கு நிலக்கரியை கொண்டு நாள் ஒன்றுக்கு 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தூத்துக்குடியில் 210 மெகாவாட் திறன் கொண்ட தலா 5 அலகுகள் (1050 மெகாவாட்) உள்ளன. வடசென்னையில் 210 மெகாவாட் திறனுள்ள தலா 3 அலகுகள் (630) மற்றும் 600 மெகாவாட் திறனுள்ள 2 அலகுகள் (1200) உள்ளன. மேட்டூர் 210 மெகாவாட் திறனுள்ள தலா 4 அலகுகள் (840 மெகாவாட்) மற்றும் 600 ெமகாவாட் திறனுள்ள ஒரு அலகுகள் உள்ளன.

இதற்கு தேவைப்படும் நிலக்கரியை மத்திய அரசு மூலம் மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து மின்வாரியம் வாங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய நிலக்கரியை மத்திய அரசு அனுப்பவில்லை. இதனால் தமிழக அனல்மின் நிலையங்களில் கடும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைத்ததால் வாரியம் சமாளித்து வந்தது. ஆனால், அது நிரந்தரமாக கிடைக்காததால் நிலக்கரியில்லாமல் அனல்மின் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டது. உடனே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் பிரதமருக்கு கடிதம் அனுப்பி கூடுதல் நிலக்கரி தருமாறு கேட்டுக்கொண்டார். அதைதொடர்ந்து தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் டெல்லி சென்று மத்திய நிலக்கரி மற்றும் மின்துறை அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதற்கிடையில் எதிர்காலத்தில் மத்திய அரசை நம்பியிருக்க முடியாது என்பதால், வெளிநாடுகளில் 30 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இந்நிலையில் நிலக்கரி கொள்முதல் தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் ேநற்று இ-டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், உலகளாவிய மின்னணு ஒப்பந்தப்புள்ளி மறுநிலை ஏலத்துடன் எண்ணூர் காமராஜர் துறைமுகம் வாயிலாக 20 லட்சம் மெட்ரிக் டன் நீராவி நிலக்கரியை எந்தஒரு வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்து தர வேண்டும். வரும் 29ம் தேதி பிற்பகல் 2 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிலர் லாபம் அடைய வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு வெளிநாட்டில் நிலக்கரி இறக்குமதி செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இதற்காகவே வேண்டும் என்று நிலக்கரி தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வடமாநிலங்களில் அவ்வப்போது பெய்யும் கனமழையால் நிலக்கரி சுரங்கங்கள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. இதனால் நிலக்கரி வெட்டி எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை காரணம் காட்டி மத்திய அரசு அடிக்கடி நிலக்கரி அளவை குறைக்கிறது. எனவே வரும் காலங்களில் இதுபோன்று மத்திய அரசை நம்பினால் மின்உற்பத்தியில் சிக்கல் ஏற்படுத்தும் என கருதி வெளிநாட்டில் நிலக்கரி இறக்குமதி செய்ய மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. அவர்கள் அனுமதி அளித்ததன் அடிப்படையில் தற்போது டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: