சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கு முடக்கப்பட்ட 13 கோடியை பெற சார்பு நீதிமன்றத்தை அணுகலாம்: கனரா வங்கிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.13 கோடியே 22 லட்சத்தை பெற சம்பந்தப்பட்ட சார்பு நீதிமன்றத்தை அணுகலாம் என்று கனரா வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், தான் நடத்திவரும் நிறுவனத்தின் பெயரில் கடந்த 2013ல் ரூ.19 கோடியே 21 லட்சத்தை அம்பத்தூர் கனரா வங்கியில் கடனாக வாங்கியுள்ளார்.

 இந்நிலையில், அவரை அணுகிய பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கர்நாடக மாநில அரசிடம் இருந்து டெண்டர்களை வாங்கத் தருவதாக கூறி பாலசுப்பிரமணியத்திடம் பெரும் தொகையை வாங்கியுள்ளார்.

அவர், தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றியுள்ளார். சட்டவிரோதமாக நடந்த இந்த பண பரிவர்த்தனை தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

இந்த பண பரிவர்த்தனை குறித்து, மத்திய அமலாக்கப்பிரிவும் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தில் வழக்கு பதிவு செய்தது.  இதையடுத்து, வழக்கில் தொடர்புடையவர்கள் சார்பில் சென்னை தேனாம்பேட்டை கனரா வங்கி கிளையில் உள்ள டெபாசிட் தொகை ரூ.13 கோடியே 22 லட்சத்து 99 ஆயிரத்தை அமலாக்கப்பிரிவு முடக்கி வைத்தது. இந்த வழக்கு, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், முடக்கி வைக்கப்பட்ட தொகையை தங்களிடம் தருமாறு கனரா வங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கனரா வங்கி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு நீதிபதி டீக்கா ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கப்பிரிவு வக்கீல் ரமேஷ் வாதிடும்போது, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வழக்கின் தீர்ப்பு வரும்வரை கனரா வங்கி இந்த தொகையை கோர முடியாது என்று வாதிட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டப்பிரிவு 8ல் சமீபத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின் அடிப்படையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போது, வழக்கு தொடர்பான சொத்தை புகார்தாரரிடம் கொடுப்பது குறித்து விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்யமுடியும். எனவே, வங்கி நிர்வாகம் சம்பந்தப்பட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகலாம். வங்கியின் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் புதிய சட்டப் பிரிவின்கீழ் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: