சட்டீஸ்கரில் மாயாவதி - ஜோகி கூட்டணிக்கு பாஜதான் காரணம்: காங்.குற்றச்சாட்டு

ராய்ப்பூர்: ‘சட்டீஸ்கரில் பகுஜன் சமாஜ் கட்சியும், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் ஜந்தா காங்கிரஸ் சட்டீஸ்கர் (ஜேசிசி) கட்சியும் கூட்டணி அமைத்துள்ளதற்கு பா.ஜ.வின் ஆதரவு உள்ளது’ என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.  சட்டீஸ்கரில் கடந்த 2003ம் ஆண்டு முதல் பா.ஜ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டீஸ்கரில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 65 தொகுதிகளில் வென்று நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பா.ஜ திட்டம் வகுத்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.வை தோற்கடிக்க, எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி, சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தொடங்கிய ஜந்தா காங்கிரஸ் சட்டீஸ்கர் (ஜேசிசி) கட்சியுடன் நேற்று முன்தினம் திடீரென கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி வென்றால் அஜித் ஜோகிதான் முதல்வர் என மாயாவதி அறிவித்தார். சட்டீஸ்கரில் 35 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், 55 இடங்களில் ஜேசிசி கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் ஜோகி, காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த 2016ம் ஆண்டு விலகி ஜேசிசி கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் இந்த கூட்டணி குறித்து சட்டீஸ்கர் காங்கிரஸ் தலைவர் பூபேஸ் பாகெல் கூறுகையில், ‘‘சட்டீஸ்கரில் பகுஜன் சமாஜ்-ஜேசிசி கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு பா.ஜ ஆதரவு உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வலையில் சிக்கியுள்ளது. அதனால்தான் இந்த கூட்டணியை பகுஜன் சமாஜ் அமைத்துள்ளது. சட்டீஸ்கரில் இதுவரை நடந்த தேர்தல்களில் பா.ஜ. உத்தரவின் பேரில்தான் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை நிறுத்தி வந்தது. பா.ஜ.வின் 2வது அணிதான் ஜேசிசி. அதனுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி வைத்தது பா.ஜ.வின் சதி அம்பலமாகியுள்ளது. இந்த புதிய கூட்டணியால் சட்டீஸ்கரில் இந்த தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: