பஸ் மீது கார் பயங்கர மோதல் : முன்னாள் ராணுவ வீரர், பெண் உடல்நசுங்கி பரிதாப பலி

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே அரசு பஸ் மீது கார் பயங்கரமாக மோதி நொறுங்கியதில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி மாணவி உள்பட 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விருதுநகர், பாரப்பட்டி தெரு, வைகுந்தம்மன் கோயில் பின்புற பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி செல்வி (55). இவர்களது மகன் தரணிபாலன் (30). திருமணமான இவர், மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை எம்ஜிஆர் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள மகன் தரணிபாலனை பார்ப்பதற்காக தந்தை பாலகிருஷ்ணன், தாய் செல்வி உட்பட 5 பேர் நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் இருந்து ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். விருதுநகரை சேர்ந்த ஜெயகாந்தன் (30) என்பவர் காரை ஓட்டி வந்தார்.

கார் நேற்று அதிகாலை 5 மணியளவில் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் எதிரே ஜிஎஸ்டி சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற அரசு பஸ், திடீரென ஒரு சாலை வளைவில் திரும்பியது. அந்த பஸ்சை வேகமாக கடக்க முயன்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த பாலகிருஷ்ணன் (60) மற்றும் அவரது மனைவியின் தங்கை சித்ரா (41) ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். செல்வி (55), அவரது தங்கை மகள் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவியான தாரணி (17), கார் டிரைவர் ஜெயகாந்தன் (30) ஆகிய 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு  பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்வி மற்றும் தாரணியை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.    விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இச்சம்பவத்தால் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையின் இருபுறத்திலும் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை, மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள சாலை வளைவின் இருபுறமும் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் நீண்ட காலமாக எரியாமல் உள்ளன. அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மின்விளக்குகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ‘’ என குற்றம் சாட்டினர்.

நகை, பணம் மகனிடம் ஒப்படைப்பு

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை திருடர்கள் எடுத்துக்கொண்டு தப்பிவிடுவர். பாதிக்கப்பட்ட உறவினர்கள் காவல் நிலையத்தில் முறையிடுவது வழக்கம். ஆனால் இந்த விபத்து நடந்ததும் உடனடியாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரணவன், எஸ்ஐ மகிதா அன்னகிருஷ்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதால் விபத்தில் சிக்கிய கார் டிக்கியில் வைக்கப்பட்டிருந்த  ஒரு லட்சத்து இரண்டாயிரத்து ஐநூறு ரொக்க பணத்தையும், விபத்தில் சிக்கி உயிரிழந்த சித்ரா  உடலில் இருந்த தாலி, பாலகிருஷ்ணன் உடலில் இருந்த 2 மோதிரம், 1 செயின், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்வியின் கழுத்தில் கிடந்த ஒரு செயின், தாரணி கழுத்தில் கிடந்த ஒரு செயின் மற்றும் ஒரு ஜோடி கம்மல் உள்ளிட்ட சுமார் 10 சவரன் நகைகள், 3 செல்போன் ஆகியவற்றை போலீசார் பத்திரமாக மீட்டு பாலகிருஷ்ணனின் மகன் தரணி பாலனிடம் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: