குடும்பத்தினரை நினைத்து பார்த்து ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்

சென்னை: வாகன ஓட்டிகள் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்,  மகிழுந்துகளில் பயணிப்பவர்கள் கட்டாயம் இருக்கைப் பட்டை அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் தலைக்கவசம் அணிவதில் சிரமங்கள் உள்ளன;  வாகனமே ஓட்டத் தெரியாதோருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் அளவுக்கு போக்குவரத்துத் துறையில் தலைவிரித்தாடும் ஊழலை சரி செய்யாமல் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதால் என்ன பயன்?; சாலைகளில் உள்ள குண்டு குழிகளை சரி செய்ய ஆணையிடாத நீதிமன்றங்கள் அப்பாவி மக்கள் மீது தலைக்கவசத்தை திணிப்பது நியாயமா? என எதிர்ப்புக் குரல்கள் எழுவது எனது செவிகளுக்கும் கேட்கிறது. இந்த வினாக்களில் நியாயம் இருக்கலாம்... ஆனால், தர்க்கம் இல்லை என்பதே உண்மை.

சாலை விபத்துகளில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைக்கவசம் அணிவதிலும், இருக்கைப் பட்டை அணிவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 2016ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் 4091 பேர் உயிரிழந்தனர். 2017ம் ஆண்டில் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டதால் இது 2956 ஆக குறைந்தது. இதை மேலும் குறைக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.அலுவல் மற்றும் வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வாகனங்களில் புறப்படுவோர் தங்களுக்காக வீட்டில் காத்திருக்கும் மனைவி, குழந்தைகளை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் தலைக்கவசம் அணிவதும், இருக்கைப் பட்டை அணிவதும் அனிச்சை செயலாக மாறி விடும். இந்த விஷயங்களில் இதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் கூட இனி வெளியில் செல்லும் போது காலனி - கைக் கடிகாரம் அணிவது போன்று தலைக்கவசம், இருக்கைப் பட்டை அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: