×

தமிழக காங்கிரசில் உச்சக்கட்ட குழப்பம் : மேலிட மவுனத்தால் கட்சியினர் கடும் அதிருப்தி

சென்னை: காங்கிரஸ் மேலிடம் மவுனம் சாதித்து வருவதால் தமிழக காங்கிரசில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. செயல் தலைவர் பதவி கேட்டு மூத்த தலைவர்கள் அழுத்தம் கொடுப்பதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை மாற்றக் கோரி மூத்த தலைவர்கள் பலர் டெல்லியில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் மேலிடமோ இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் தமிழக காங்கிரசில் திருநாவுக்கரசர் மாநில தலைவராக நீடிப்பாரா? என்று கட்சியினர் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த குழப்பத்தை போக்க காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் இதுவரை முன்வரவில்லை. இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கிறது. இந்த சூழ்நிலையில், திருநாவுக்கரசரை மாற்றுவது சரியாகுமா? என்ற விவாதம் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால், மாவட்ட தலைவர்கள் 72 பேரில் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் 52 பேர் உள்ளனர். தற்போது திருநாவுக்கரசரை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமித்தால் இவர்கள் புதிய தலைவருக்கு எப்படி ஆதரவு தருவார்கள் என்ற கருத்தையும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, இப்போது தலைவரை மாற்றினால் நிர்வாகிகள் மாற்றம் என அதில்தான் கட்சியினர் கவனம் செலுத்துவார்கள். தேர்தல் நேரத்தில் பல குழப்பங்கள் நிலவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தலைவர் மாற்றத்துக்கான பேச்சு டெல்லியில் இதுவரை அடிபடவில்லை என்பதால் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள மூத்த தலைவர்கள் செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேலிடத்துக்கு தெரிவித்துள்ளனர். கேரளாவில் நியமித்ததை போன்று 3 செயல் தலைவரை நியமித்த பின்பே தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே அவர்கள் மேலிடத்துக்கு கொடுக்கும் அழுத்தமாக உள்ளது. இந்த வரிசையில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், ஜெயக்குமார், வசந்தகுமார், உள்ளிட்ட தலைவர்கள் பதவி கேட்டு முட்டி மோதி வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக சில தலைவர்கள் டெல்லிக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
 அதாவது, ஈவிகேஎஸ்.இளங்கோவனை நியமிக்கும் பட்சத்தில் அவருக்கு போட்டியாக சுதர்சன நாச்சியப்பனும், பீட்டர் அல்போன்சுக்கு போட்டியாக வசந்தகுமாரும், ஜெயக்குமாருக்கு போட்டியாக முன்னாள் எம்பி விஸ்வநாதனும் செயல் தலைவர் பதவிக்கு போட்டி போட தொடங்கியுள்ளனர். ஆனாலும் செயல் தலைவர் பதவி என்பது தமிழக காங்கிரசுக்கு மேலும் பிரச்னையை பெரிதாக்கவே செய்யும் என்று சில மூத்த தலைவர்கள் குமுறலில் உள்ளனர்.இதுகுறித்து மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘செயல் தலைவர் பதவி என்பது தமிழக காங்கிரசுக்கு ஒத்து வராது. ஏற்கனவே 15 கோஷ்டிகள் உள்ளது. இதில் 3 செயல் தலைவரை நியமித்து மண்டலமாக பிரித்து கொடுத்தால் அவர்கள் தனித்தனியாக செயல்பட தொடங்குவார்கள்.
இது கட்சி உடைவதற்கு தான் வழிவகுக்கும். மேலும் இந்த பிரச்னை குறித்து காங்கிரஸ் மேலிடம் ஒரு உறுதியான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். அப்படி அவர்கள் செய்யாவிட்டால் கட்சியில் தொடர்ந்து குழப்பம் தான் நீடிக்கும்’’ என்றார்.   

பீட்டர் அல்போன்ஸ் மீது புகார் அளிக்க பயணம்;

திருநாவுக்கரசருக்கு எதிராக தற்போது களத்தில் தீவிரமாக இருப்பவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ்தான். இவர்களை ப.சிதம்பரம் தூண்டி விடுவதாக கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு எதிராக பீட்டர் அல்போன்ஸ் களம் இறங்கியிருப்பது அவரது ஆதரவாளர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் தமாகாவில் இருந்த போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியை விமர்சித்து பேசிய ஆடியோவுடன் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் புகார் கொடுக்க டெல்லி சென்றுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu Congress, silence, severe discontent
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...