×

எச்.ராஜா என்ன மனநிலையில் இருக்கிறார் என்றே தெரியவில்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று இரவு 7.15 மணிக்கு விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார். அப்போது அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளை, தேர்தல் தேதி அறிவித்ததும் தொடங்குவோம். பாஜ, அதிமுக இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், அமைச்சர் உதயகுமார் மத்திய அரசை பாராட்டியுள்ளார். ஒரு கட்சியை பற்றி கருத்து சொல்வது நல்ல செயல்தான்.எம்எல்ஏ சண்முகநாதன், கூட்டுறவு சங்க தேர்தலில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, பணம் வாங்கி செயல்படுவதாக கூறியுள்ளார். அதற்கான விளக்கத்தை அவரிடமே கேட்கப்பட்டுள்ளது.திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்ததற்கு, அமைச்சர் ஒருவர் கருத்தை கூறியது சர்ச்சையானது. அதுபற்றி மீண்டும் பேசி, புதிய பிரச்னையாக்க வேண்டாம். அது முடிந்துவிட்ட பிரச்னை.

பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றம் மற்றும் காவல்துறையை விமர்சித்துள்ளார். அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. தயவு செய்து, அவர் கூறிய கருத்துக்கு நான் பதில் சொல்ல தயாராக இல்லை. 7 பேர் விடுதலை பற்றிய விவகாரத்தில், ஏற்கனவே இந்திய சட்ட விதிகளின்படி உச்ச நீதிமன்ற ஆலோசனையின்படி, தமிழக அமைச்சரவை கூடி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உரிய வழிமுறையின்படி தமிழக கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கவர்னரின் பொறுப்பு. நாடாளுமன்ற தேர்தலை அதிமுக தனியே சந்திக்குமா, கூட்டணியுடன் சந்திக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுதான் குறைக்க வேண்டும் என பாஜ மாநில தலைவர் தமிழிசை கூறியது, அவரது சொந்த கருத்து. மற்ற மாநிலங்களில், பெட்ரோலிய பொருட்களுக்கான மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளனர். அதுபோல் தமிழகத்தில் சில அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியை தமிழக அரசு குறைத்துள்ளது. மேலும் சில வரிகளை குறைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினோம். மத்திய அரசும் குறைத்துள்ளது.தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும், டிடிவி.தினகரன் வெற்றி பெறுவதாகவும், அடுத்த பிரதமரை தேர்வு செய்யப்போவதாகவும் கூறி வருகிறார். இது உலகத்திலேயே மிகப்பெரிய மகா ஜோக்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Deputy Chief Minister of Tamil Nadu, ops ,h.raja, mentality
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...