×

கருப்பு பண மீட்பில் 2வது கட்ட நடவடிக்கை 55,000 நிறுவனம் பதிவிலிருந்து நீக்கம்: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கருப்பு பண மீட்பு நடவடிக்கையில் 2வது கட்டமாக கம்பெனிகள் பதிவில் இருந்து 55,000 நிறுவனங்களை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  கருப்பு பணத்தை மீட்டும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 2016 நவம்பர் 8ம் தேதி பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு பழைய 500 மற்றும் 1,000 நோட்டை வங்கிகளில் மாற்ற அவகாசம் தரப்பட்டது. ஜன்தன் மற்றும் நீண்டகாலமாக பரிவர்த்தனை இல்லாத கணக்குகளில் அதிக தொகை டெபாசிட் செய்வது கண்காணிக்கப்பட்டது.  இதுபோல், போலி நிறுவனங்கள் மூலம் கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நிறுவனம் தொடர்ந்து செயல்படாமல் இருந்தாலோ, 2 ஆண்டுக்கு மேல் கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தாலோ, கம்பெனிகள் பதிவேட்டில் இருந்து அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும். இத்தகைய நிறுவனங்கள் சட்ட விரோத பண பரிமாற்றங்களுக்கு உதவிகரமாக உள்ளன. இதன்படி நீண்ட காலம் செயல்படாத, கணக்கு தாக்கல் செய்யாத 2.26 லட்சம் நிறுவனங்களை கம்பெனி விவகார அமைச்சகம் நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தது.

 கருப்பு பண மீட்பு, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு நடவடிக்கையின் 2வது கட்டமாக, 55,000 போலி நிறுவன பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய கம்பெனிகள் விவகார அமைச்சர் பி.பி.சவுத்ரி கூறுகையில், ‘போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 2.26 லட்சம் நிறுவனங்கள் கம்பெனிகள் பதிவில் இருந்து நீக்கப்பட்டனன. இவற்றில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரே அறையில் மட்டுமே இயங்கியுள்ளன. 2வது கட்டமாக 55,000 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவற்றின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கை தொடரும். மேலும் சில நிறுவனங்கள் பதிவு நீக்கப்பட இருக்கின்றன’ என்றார். இந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு சட்ட விரோத பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Black money recovery
× RELATED அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு:...