×

தீபாவளி பட்ஜெட் பர்சை கடிக்கும் பருப்பு, எண்ணெய் விலை கிடுகிடுபலகாரங்கள் விலை 30% உயர்வு

காரைக்குடி: பருப்பு, எண்ணெய் வகைகளின்  விலை உயர்வால் செட்டிநாட்டு பலகாரங்கள் 30 சதவீதத்துக்கு மேல்  விலை உயர்ந்துள்ளது.  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத்தொழிலாக செட்டிநாட்டு பலகாரங்களை தயாரித்து வருகின்றனர்.  இங்கு  திருமணங்கள்,  வீட்டு விசேஷங்கள் மட்டுமின்றி தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக, பலகாரங்கள் செய்யப்பட்டு மொத்தமாகவும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேன்குழல் (முறுக்கு), கைமுறுக்கு, பாசிப்பருப்பு உருண்டை, உப்பு சீடை, சீப்பு சீடை, மகிழம்பு முறுக்கு, அதிரசம், 4 முதல் 9 சுற்றுவரை உள்ள கைச்சுற்று முறுக்கு உள்பட 50  வகையான பலகாரங்கள் தயார் செய்யப்படுகின்றன.  இதே சுவையுடன் வீட்டில் தயார் செய்ய விரும்புபவர்களுக்கு முறுக்கு, இடியாப்பம், அதிரச மாவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு தயாராகும் பலகாரங்கள் சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, கோவை உள்பட தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. மேலும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள உறவினர் வீடுகளுக்கு செல்பவர்கள் இங்கிருந்து அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். தற்போதைய நிலவரப்படி சந்தையில் பாசிப்பருப்பு, உளுந்தம்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள்,  எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் செட்டிநாட்டு பலகாரங்கள் கடந்த ஆண்டை விட 10 முதல்  30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.    இதனால் இம்முறை தீபாவளி பலகார பட்ஜெட் லேசாக பர்சை கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ‘‘உணவு பொருட்களின் விலை ஏற்றத்தால் தற்போது. அதற்கு ஏற்ப  விலை உயர்த்தி விற்பனை செய்கிறோம். 12க்கு விற்ற ஒரு சுற்று முறுக்கு 15, 10க்கு விற்ற அதிரசம் 15, ஒரு கிலோ சீடை 350ல் இருந்து 400, மணகோலம் கிலோ 320 முதல் 360 வரை விற்பனை செய்கிறோம். சுவை மற்றும் தரம் நிரந்தரமாக இருப்பதால் எங்களிடம் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Diwali budget, lentils, oils and pulses
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...