×

கைவிட்ட ஓணம் பண்டிகை வெள்ளத்தில் கரைந்த வெல்ல விற்பனை: விவசாயிகள் கவலை

பழநி: கேரள வெள்ள பாதிப்பு காரணமாக ஓணத்திற்கான வெல்ல விற்பனை இம்முறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் இழப்பைச் சந்தித்துள்ளனர்.  தமிழகத்தில் வேலூர் மாவட்டம், பிலிக்கல்பாளையம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட சில ஊர்களிலேயே வெல்லம் அதிகளவு தயாரிக்கப்படுகிறது. ெநய்க்காரப்பட்டியில் தயாராகும் வெல்லம் பெருமளவில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்குள்ள வெல்ல சந்தையில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஓணம். இப்பண்டிகைக்கு வெல்லம் அதிகளவு விற்பனையாகும். ஆனால் கடந்த மாதம் பெய்த கனமழையால் கேரள மாநிலம் வெள்ளக்காடானது. இதனால் அரசு சார்பிலும், பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடும் ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை.

மிக குறைந்த அளவிலான மக்களால் எளிமையாகவே இந்த முறை  அங்கு ஓணம் கொண்டாடப்பட்டது. இதனால் ஓணம் பண்டிகைக்கான வெல்ல விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து அதிகரித்து வெல்லம் அதிகளவு தேக்கமடைந்ததால் விலை கடுமையாக சரிந்து விற்பனையானது.  வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஓணம் பண்டிகைக்கு முன்னதாக கடைசி சில நாட்கள் மட்டுமே சந்தையில் வெல்லம் விற்பனையானது. அப்போது 30 கிலோ கொண்ட சிப்பம் ஒன்று 1,350 வரை விலை போனது. கேரள வெள்ள பாதிப்பிற்கு பின் வெல்ல விற்பனை முற்றிலுமாக இல்லை. இதனால் வரத்து அதிகரித்து வெல்ல சிப்பம் தற்போது ஒரு சிப்பம் 900 அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. விலைகுறைவு மற்றும் விற்பனையில்லாத காரணத்தால் விவசாயிகள், வியாபாரிகளுக்கு இம்முறை எதிர்பார்த்த லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Onam festivals, ghee, farmers
× RELATED மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர்...