மண் தட்டுப்பாட்டால் செங்கல் விலை உயர்வு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டத்தில் மண் தட்டுப்பாட்டால் செங்கல் விலை உயர்ந்து வருகிறது. 5,000 எண்ணிக்கையான செங்கல் 27.500க்கு விற்கப்படுகிறது. தஞ்சை மாவட்டம் திருவையாறு, நெடார், திருக்காட்டுப்பள்ளி, ஆவூர், திருக்கருக்காவூர் மற்றும் திருவாரூர், அரியலூர் மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் ஆற்று படுகையில் செங்கல்சூளை அமைத்துள்ளனர். 5,000 செங்கல் தயார் செய்வதற்கு 10 நாட்களாகும். தற்போது ஆறுகளில் தண்ணீர் ஓடுவதால் மண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு செங்கல் 3.50க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு செங்கல் 5.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக 5,000 செங்கலின் விலை 17,500 விற்பனை செய்யப்பட்டது. தற்போது 5,000 செங்கல் 27.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டிடம் கட்டுபவர்கள் வேறு வழியின்றி அதிக பணம் கொடுத்து செங்கல் வாங்குகின்றனர். இனி வருங்காலங்களில் மணலை விட செங்கல் விலை மேலும் உயரும் என்று செங்கல் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அன்பு கூறுகையில், ஆறுகளில் தண்ணீர் ஓடுவதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிக விலை கொடுத்து மணல் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. லேசான மழை பெய்தாலே தயாரித்து வைத்திருக்கும் செங்கல் வீணாகி விடும். மணல் தட்டுப்பாட்டால் செங்கல் விலை உயர்ந்து வருகிறது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: