×

ஏர்வாடி தர்ஹாவில் மனநல மருத்துவமனை கட்டியும் சாலையில் திரியும் மனநோயாளிகள்

* கை, காலில் சங்கிலி கட்டியபடி நகரை சுற்றும் பரிதாபம்
* அரசு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கீழக்கரை: ஏர்வாடி தர்ஹாவில் 2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் (காப்பகம்) மனநோயாளிகளுக்கு எந்த பயனும் இல்லாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹாவில் மனநோயாளிகளை பாதுகாப்பதற்காக ஏராளமான தனியார் மனநல காப்பகங்கள் செயல்பட்டு வந்தன. கடந்த 2001, ஆக. 6ம் தேதி ஒரு காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 28 மனநோயாளிகள் தீயில் கருகி பலியாயினர். இதைத்தொடர்ந்து தனியார் மனநல காப்பகங்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து காப்பகத்தில் இருந்த மனநோயாளிகளை, ராமநாதபுரம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

அதன்பிறகும் பல மாநிலங்களிலிருந்தும் மனநோயாளிகளை, உறவினர்கள் அழைத்து வந்து இப்பகுதியில் விட்டுச்சென்றனர். ஆதரவின்றி சுற்றித்திரிந்த இந்த மனநோயாளிகளை பாதுகாக்க அரசே மனநல காப்பகம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து ₹2 கோடி செலவில் ஏர்வாடி தர்ஹாவில் 50 படுக்கைகள் கொண்ட மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் கட்டப்பட்டு, கடந்த 2016ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. மருத்துவமனை கட்டியும் சாலையில் சுற்றித்திரியும் மனநோயாளிகளுக்கு எந்த பயனும் இல்லை. மருத்துவமனை நிர்வாகம் தனியார் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். இவர்கள் பணத்திற்காக பரமக்குடி மற்றும் மதுரை உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து மனநோயாளிகளை கொண்டு வந்து வைத்துள்ளனர். இதனால் ஏர்வாடியில் பல மனநோயாளிகள் பரிதாபமான நிலையில் ஆதரவின்றி உணவு, உடையின்றி சுற்றி திரிகின்றனர்.

தீவிபத்து நடந்த பிறகு மனநோயாளிகளை சங்கிலியால் கட்டக்கூடாது என்று அரசு உத்தரவு போட்டிருந்தாலும், சில மனநோயாளிகள் தர்ஹா பகுதியில் மரங்களில், சங்கிலியால் கட்டிப்போட்டுள்ளனர். இவர்களையும், சாலையில் திரியும் மனநோயாளிகளையும் ஏர்வாடி அரசு மனநல காப்பகத்தில் சேர்த்து பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஏர்வாடியில் கட்டப்பட்டுள்ள அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தை செல்லமுத்து என்பவர் நடத்தி வரும் தனியார் அறக்கட்டளை வசம் ஒப்படைத்துள்ளனர். ஏர்வாடியில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை இந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், காப்பகத்தில் சேர்க்க மறுக்கின்றனர்.

இதனால் அவர்கள் பரிதாபமாக உணவின்றி ரோட்டில் சுற்றித்திரிகின்றனர். இவர்களில் சிலர் திருமணமாகாத இளம்வயது பெண்களாக இருக்கின்றனர். இவர்களை சில காமவெறியர்கள் இரவில் சீரழித்து விடுகின்றனர். சிலர் கை மற்றும் கால்களை சங்கிலியால் பிணைக்கப்பட்டு கை, கால்கள் வீக்கத்துடன் வீதியில் சுற்றி திரிகின்றனர். தண்ணீர் குடிக்க, உணவு அருந்தக்கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இங்கு அனாதையாக சுற்றித்திரியும் பரிதாபத்திற்குரிய மனநோயாளிகளை, மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Airwadi dharah, mental hospital, mental patients
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...