சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு ஜருகுமலையில் நடந்த மண் பரிசோதனை பணிகள் மக்கள் முற்றுகையால் நிறுத்தம்

அம்மாப்பேட்டை: சேலம்-சென்னை 8வழிச்சாலைக்கு ஜருகுமலையில் நடக்கும் தொடர் மண்பரிசோதனைக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு ெதரிவித்து முற்றுகையிட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன.  

சேலத்தில்  இருந்து சென்னைக்கு 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்  8வழி பசுமை விரைவுச்சாலை திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், லட்சக்கணக்கான  மரங்கள், நூற்றுக்கணக்கான நீர்நிலைகள், 8மலைகள் சேதாரமாகும் என்பதால் இந்த  திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  8வழிச்சாலை திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட  விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த மாதம் 21ம்தேதி நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. அதே நேரத்தில் கையகப்படுத்தும் நிலத்தின் அளவு மற்றும் மதிப்பீட்டு தொகையை குறைத்து 6வழிச்சாலையாக இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு கடந்த 14ம்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2வாரத்திற்கு நடைபெறாது என்று உறுதி அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (20ம்தேதி) மீண்டும் நடந்த விசாரணையின் போது, ‘சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காவிட்டால் 8வழி பசுமை சாலை திட்டம் கைவிடப்படும்,’ என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தகவல் ெதரிவித்தனர். அதேநேரத்தில் கண்டிப்பாக சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் என்று தமிழக அமைச்சர்கள் தெரிவித்தனர்.  

இந்த சூழலில் சேலம் அருகேயுள்ள சன்னியாசிகுண்டு ஜருகுமலைப்பகுதியில், கடந்த இருநாட்களாக 8 வழிச்சாலைக்கு மண்பரிசோதனை செய்யும் பணிகள் மும்முரமாக நடந்தது. இதையடுத்து கிராம மக்களும், பாதிக்கப்படும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று அங்கு திரண்டு முற்றுகையிட்டனர். ஆனாலும் போலீஸ் பாதுகாப்போடு பணிகள் நடந்தது. இதையடுத்து கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மண்பரிசோதனை பணிகள் நிறுத்தப்பட்டது. இது குறித்து பாதிக்கப்படும் விவசாயிகள் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த திட்டம் குறித்து பரிசீலனை செய்து வருகிறது. பணிகள் 2வாரத்திற்கு நிறுத்தப்படும் என்றும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காவிட்டால் திட்டமே கைவிடப்படும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் யாரை திருப்திப்படுத்த தொடர்ந்து பணிகளை மேற்கொள்கின்றனர் என்பது தெரியவில்லை. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகவே உள்ளது’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: