×

ராஜிவ்காந்தி கொலையின் போது உயிரிழந்த போலீஸ் ஏட்டு மகன் புதுவையில் உண்ணாவிரதம்: 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை  பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்,  ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுவிக்க, தமிழக  அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி அதை தமிழக  கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரைத்தது. தற்போதுவரை இவ்விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் மாளிகை எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளது.  இந்த நிலையில்  பெரும்புத்தூரில் ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டபோது அங்கு பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு தர்மன் உடல்சிதறி உயிரிழந்தார். சென்னை,  தேனாம்பேட்டையைச் சேர்ந்த இவரது மகன் ராஜ்குமார் (32) தனது மனைவி, 2 பெண்  குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

 தற்போது புதுச்சேரியிலுள்ள ஒரு  ஓட்டலில் பணியாற்றி வரும் ராஜ்குமார் தர்மன், ராஜிவ்காந்தி கொலை வழக்கு  குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்துள்ளார். தனது  கோரிக்கையை முன்வைக்கும் வகையில் நேற்று காலை புதுச்சேரி  கடற்கரை காந்தி சிலை முன்பு தனது தந்தையின் திருவுருவப் படத்துடன்  ராஜ்குமார் அமர்ந்து தனிமனித சத்தியாகிரக  போராட்டத்தை  தொடங்கினார். அப்போது ராஜிவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7  பேரையும் விடுதலை செய்யக்கூடாது என அவர் வலியுறுத்தினார். இந்நாட்டில்  நடக்கும் இதுபோன்ற கொடுமை வேறு யாருக்கும் கூடாது என தனது மனக்குமுறலை  வெளிப்படுத்தினார்.  தகவல் கிடைத்து அங்கு வந்த பெரியகடை போலீசார்,  ஒருமணிநேரமாக உண்ணாவிரதம் இருந்த ராஜ்குமாரிடம், அனுமதியின்றி இங்கு  போராட்டம் நடத்தக்கூடாது எனக்கூறி அவரை கைது செய்து காவல் நிலையம்  அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் கிழக்கு எஸ்பி மாறன், இன்ஸ்பெக்டர்  மோகன்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

 அப்போது புதுச்சேரியில்  பணிபுரியும் தான், 2 நாட்களுக்கு முன்பு சென்னை சென்று வந்ததாகவும், அப்போது  ராஜிவ்காந்தி கொலை சம்பவத்தை உறவினர்களிடம் பேசியபோது தந்தை பலியான  நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்ததாகவும், இதனால் குற்றவாளிகளை விடுவிக்க  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்போராட்டத்தை நடத்தியதாகவும் கூறினார்.  அவரை எச்சரித்த போலீசார் சிறிதுநேரத்திற்குபின் விடுவித்தனர். இச்சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajiv Gandhi, murder, police, son and seven
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...