×

புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி: தேர்தல் வாக்குறுதியில் ஒன்றை கூட பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை

கடலூர்: தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக் கூட பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுவை முதல்வர் நாராயணசாமி கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது 2014 தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணம் மீட்கப்பட்டு ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என்றார். விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென்றார். பொருளாதார வீக்கம் குறைக்கப்படுமென்றார், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்போம் என்றார். இதில் எதுவும் நடைபெறவில்லை. தமிழகத்திலேயே கடலூரில் தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய 11 லட்சம் கோடியை மத்திய அரசு கொள்ளையடித்து வைத்துள்ளது. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் எதுவும் நடைபெறவில்லை. ஜிஎஸ்டி வரியால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லை, நிலம் விற்பனை முடங்கியுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. வரும் 2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத்தேர்தல் பாஜகவுக்கும், மோடிக்கும் மிகப்பெரிய பாடத்தை கற்பிக்கும். இலங்கையில் தமிழர்கள் இறப்புக்கு காங்கிரஸ் காரணமல்ல. ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டதால் எங்களுக்கு வருத்தம் இருந்தது. எனது தனிப்பட்ட கருத்து ராஜிவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடக்கூடாது என்பதே. ஆனால், ராகுல்காந்தி இந்த விஷயத்தில் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puducherry Chief Minister Narayanasamy, Election and Prime Minister Modi
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...