கோவை அருகே தனியார் கல்லூரி தாளாளர் மீது பெண் மீண்டும் பாலியல் புகார்

பெ.நா.பாளையம்: கோவை அருகே உளள தனியார் கல்லூரி தாளாளர் மீது கல்லூரியில் பணியாற்றிய பெண் பாலியல் புகார் அளித்தார். நேற்று முன்தினம் புகாரை வாபஸ் பெற்ற நிலையில், அதே பெண் நேற்று மீண்டும் புகார் தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி தாளாளர் அங்கு பணிபுரியும் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வளைதளத்தில் வந்த பெண், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த  18ந் தேதி இன்ஸ்பெக்டர் மீனாம்பிகையிடம் புகார் மனு அளித்தார். இதுபற்றி விசாரணை நடந்து கொண்டிருந்தபோது நேற்று முன்தினம் இரவு பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோரை கூட்டி வந்து, மீண்டும் புகார் தருவதாக கூறி கொடுத்த புகாரை திரும்ப பெற்றுச்சென்றார். இந்நிலையில் அந்த பெண் நேற்று மீண்டும் காவல்நிலையம் வந்து கல்லூரி தாளாளர் மீது புகார் கொடுத்தார். போலீசார் புகாரை ஏற்றுக் கொண்டதற்கான ரசீது வழங்கினர்.

வழக்கமாக இதுபோன்ற பாலியல் புகார் வந்தால் உடனடியாக விசாரித்து வழக்கு பதிவு செய்வது நடைமுறை. ஆனால் போலீசார் விசாரணை கூட இதுவரை துவங்கவில்லை. இதுபற்றி போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் கல்லூரி தாளாளர் மீது நடவடிக்கை வேண்டாம். மிரட்டி விடுமாறு கூறியுள்ளார். அதனால் புகார் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, என்றனர். இதற்கிடையே கல்லூரி தாளாளர் மீது நடவடிக்கை வேண்டி அதே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் கோவை மாதர் சங்கத்தினர் புகார் மனு அளித்து போராட்டம் நடத்தினர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், வலை தளங்களில் வெளியான வீடியோவை ஆதாரமாக வைத்து துடியலுார் மகளிர் போலீசில் நேற்று புகார் மனு கொடுத்துள்ளனர்.  மாதர் சங்கத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி கூறுகையில், இதில் சம்பந்தப்பட்ட பெண் மிரட்டப்பட்டுள்ளார். எனவே அவர் புகார் கொடுக்க அச்சமடைந்துள்ளார். எனவே நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். தாளாளர் மீது, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியவேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: