பழுதான 500 ஊராட்சி கட்டிடங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட 88 கோடி நிதி ஒதுக்கீடு: ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகவல்

திருவண்ணாமலை: தமிழகம் முழுவதும், 385 ஊராட்சி ஒன்றியங்களில், 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரும்பாலான ஊராட்சி மன்ற அலுவலகங்கள் பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பழுதடைந்த கட்டிடங்களில் உள்ள தளவாட பொருட்கள், பதிவேடுகள் பாழாகி வருகின்றன. எனவே, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாநில அரசின் பங்களிப்பு நிதியுடன் இணைந்து பழுதடைந்துள்ள, பழைய ஊராட்சி மன்ற கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் கட்ட அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நடப்பு நிதி ஆண்டில் 500 ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள் தலா 17.64 லட்சம் மதிப்பில் கட்ட, மொத்தம் 88.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களின் உடல் உழைப்ைபயும் கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் வகையில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்துக்கு 60 புதிய கட்டிடங்கள் கட்ட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு தலா 20 புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடியாக தொடங்கி, வரும் மார்ச் மாத இறுதிக்குள் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: