மின்துறை அமைச்சர் தங்கமணி பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியதாக மாஜி எம்.எல்.ஏ. சரஸ்வதி திடீர் கைது: நாமக்கல்லில் பெரும் பரபரப்பு

நாமக்கல்: மின்துறை அமைச்சர் தங்கமணி குறித்து, வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக, முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதியை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாமக்கல் மோகனூர் ரோடு முல்லைநகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சரஸ்வதி (61). முன்னாள் எம்எல்ஏ. கடந்த 1991 சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக சார்பில் கபிலர்மலை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவில் இருந்து விலகி,திமுகவில் சரஸ்வதி இணைந்தார். நாமக்கல்லில் திமுக சார்பில் நடைபெறும் கட்சி கூட்டங்கள், போராட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வந்தார். சரஸ்வதி மீது கீரம்பூரை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் ராஜா(34), நேற்று முன்தினம் இரவு நாமக்கல் போலீஸ் ஸ்டேசனில் ஒரு புகார் அளித்தார்.  அதில், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி தொடர்ந்து மின்துறை அமைச்சர் தங்கமணியை பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறாக கருத்து பதிவிட்டு வருகிறார்.

அதை எனது மனைவியின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறார். இது பற்றி சரஸ்வதியை நேரில் சந்தித்து கேட்டபோது,அவர் என்னை ஆபாச வார்த்தையால் திட்டியதுடன் மிரட்டுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குலசேகரன், சரஸ்வதி மீது, இந்திய தண்டனை சட்டம் 153,(வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்புதல்) 504,(கலகத்தை ஏற்படுத்துதல்) 505(1),(பி), 506 (1) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். நேற்று அதிகாலை முல்லை நகரில் உள்ள சரஸ்வதி வீட்டுக்கு சென்ற போலீசார்,அவரை கைது செய்து நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.

இளங்கோவன்உள்ளிட்ட திமுகவினர் போலீஸ் ஸ்டேசனுக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.டிஎஸ்பி ராஜேந்திரன், திமுகவினரிடம் சரஸ்வதி மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்த விபரங்களை தெரிவித்து,அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல உள்ளதாக கூறினார். அப்போது வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பதாக திமுகவினர் கூறினர். இதைத்தொடர்ந்து சரஸ்வதியை போலீசார் நாமக்கல் 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்று மாஜிஸ்திரேட் தமயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, சரஸ்வதி தனக்கு அல்சர், ரத்த கொதிப்பு போன்றவவை இருப்பதால் மருத்துவ சிகிச்சை வேண்டும் என்றார். இதை ஏற்ற மாஜிஸ்திரேட்,மருத்துவ சிகிச்சை அளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதன் பின் சரஸ்வதிக்கு,நாமக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர். சுகன்யா சிகிச்சை அளித்தார். இதையடுத்து போலீசார்,சரஸ்வதியை மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர். மாஜிஸ்திரேட் தமயந்தி,வரும் 1ம் தேதி வரை சேலம் பெண்கள் சிறையில் சரஸ்வதியை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அப்போது திமுக வழக்கறிஞர்கள், சரஸ்வதியை சேலம் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற நாமக்கல் டாக்டர்கள் கூறியுள்ளதாக கூறி,மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தனர். ஆனால், சேலம் சிறையில் சரஸ்வதியை அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சரஸ்வதியை போலீசார் சேலம் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து சரஸ்வதியை போலீசார் சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர். அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசாருக்கு கண்டனம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் கூறும்போது, காவல்துறை, உயர்நீதிமன்றத்தை விமர்சனம் செய்து பேசிய பாஜ தேசிய செயலாளர் ராஜாவை போலீசார் கைது செய்யவில்லை. முதல்வரை விமர்சனம் செய்த கருணாஸ் எம்எல்ஏவை கைது செய்யவில்லை. ஆனால்,திமுகவில் இருப்பதால் முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதியை கைது செய்துள்ளனர்.கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் போலீசார் செயல்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இதை சட்டப்படி சந்திப்போம். தலைமையின் உத்தரவைபெற்று,அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: