எம்டிசி நிர்வாகம் புதிய முயற்சி : வெறும் ரூ.5 தாங்க டிக்கெட்.. பஸ்சுல ஏறுங்க.. இரவோடு இரவாக ஸ்டிக்கர்களை ஒட்டினர்

சென்னை: மாநகர பஸ்களில் குறைந்த கட்டணம் குறித்து பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் நேற்று முதல் பஸ்சின் முன்பக்கத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. சென்னை மாநகர அரசு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னையில் இருந்து பல்வேறு பணிகளுக்காக பல பகுதிகளுக்கு செல்லும் நடுத்தர மக்கள் மற்றும் மாணவர்களும், புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை மாநகரத்துக்கு வருபவர்கள் பெரும்பாலும் மாநகர பஸ்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்காக,  மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) மூலம் சென்னை நகர் மற்றும் புறநகரில் தினமும் 3,439 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 48 லட்சம் பேர் வரை பயணித்து வந்தனர். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மாநகர பஸ்களில் நிற்க கூடாத இடம் மில்லாத நிலை இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் திடீரென அரசு பஸ் கட்டணம் வரலாறு காணாத அளவில் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பயணிகள் அரசு பஸ்களை புறக்கணித்து மின்சார  ரயில், பைக் போன்ற போக்குவரத்துக்கு மாற்றினர்.  கட்டண உயர்வால் தமிழக முழுவதும் அரசு பஸ்கள் வெறிச்சோடியது. சென்னையிலும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. ஓட்டை உடைசல் பஸ்களுக்கு இவ்வளவு கட்டணம் கொடுக்க வேண்டுமா என பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்.ஏற்கனவே நஷ்டத்தில் இயக்கும் போக்குவரத்து துறையை டிக்கெட் கட்டண உயர்வு மூலம் வருவாயை அதிகரிக்கலாம் என்று நினைத்து அரசுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. தினசரி வருவாய் 2 மடங்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வெறும் 9 சதவீதம் மட்டுமே வருவாய் அதிகரித்தது. பயணிகளின் கூட்டம் குறைந்ததால், அதிகாரிகள் வருவாய் ஈட்ட மற்றொரு வழியை கையில் எடுத்தனர். பெரும்பாலான சாதாரண பஸ்களை அதிக கட்டணம் கொண்ட டீலக்ஸ் பஸ்களாக மாற்றினர். இதிலும் வருவாய் கிடைக்காமல், ஏற்கனவே இருந்த மக்கள் கூட்டம் குறைய தொடங்கியது. அந்த பஸ்களை கண்டாலே பொதுமக்கள் பயந்து ஓடினர். சில வாரங்களாக மாநகர பஸ்களில் டெய்லி கலெக்‌ஷன் மிக குறைவாகவே வருகிறது.

குறிப்பாக, இரவு நேர பஸ்களில் முன்பெல்லாம் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த பஸ்களால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்தனர். ஆனால், தற்போது இரவு நேர பஸ்கள் ஆட்கள் இன்றி காலியாக தான் இயக்கப்படுகிறது. காரணம, இரவு நேர டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததுதான். பொதுமக்கள் அரசு பஸ்கள் பக்கம் ஈக்கவும், வருவாயை அதிகரிக்கவும் எம்டிசி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். அதன்படி, பஸ்களில் நேரடி ஆய்வுக்கு சென்று கண்டக்டர், டிரைவர்கள் பயணிகளிடம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதை கண்காணித்தனர். மேலும் ஓசி பயணம் செய்பவர்களை சோதனை நடத்தி பிடிப்பது, கிளை மற்றும் மண்டல மேலாளர்கள் அவ்வப்போது ஆய்வு நடத்தி தினமும் 100 சதவீதம் பஸ் இயக்கத்தை உறுதி செய்வது என பல முறைகளை கையாண்டனர். ஆனால், அவை அனைத்தும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில், பயணிகளை ஈர்க்க எம்டிசி நிர்வாகம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 3,439 பஸ்களில் 1,100 பஸ்களை சாதாரண கட்டண பஸ்களாக ஏற்கனவே மாற்றியது. அதில் குறைந்தபட்சம் கட்டணம் ₹5 ஆக உள்ளது. சில டீலக்ஸ் பஸ்களும் சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டது. ஆனாலும் பஸ்சின் தோற்றத்தை கண்டு மக்கள் அதில் ஏற தயங்கி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் குழப்பத்தை தீர்க்கும் வகையில் நேற்று முதல் சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ₹5 என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. அதன்படி, பஸ்சின் முன்புறம் மற்றும் இரு ஓரங்களிலும் இரவோடு இரவாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: