வேன்களில் கடத்தி வந்து விற்பனை : ரூ.25 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் : நெல்லை சகோதரர்கள் கைது

தாம்பரம்,: குரோம்பேட்டை அருகே ₹25 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பிடிபட்டன. இதுதொடர்பாக, அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர். போலீசாருக்கு இதில் தொடர்புள்ளதா என உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.   தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனைக்கு தடைசெய்யப்பட்டபோதிலும் சென்னை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் அடையாறு துணை கமிஷனர் சசாங் சாய் தலைமையிலான தனிப்படையினர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் குட்கா விற்பனை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, குட்கா விற்பனை செய்பவர்கள் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை போலீசார் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காவல் நிலைய கட்டுபாட்டில் உள்ள நெமிலிச்சேரி ஆர்.கே.நகர், நர்மதா தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, அந்த வீட்டில் ₹25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்த முத்துராஜ் (31), அவரது சகோதரர் முத்துசுதாகர் (26) ஆகியோரை தனிப்படையினர் பிடித்து,  சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்தனர். பின்னர், அங்கிருந்த குட்கா பொருட்கள் மற்றும் 2 வாகனங்களையும் பறிமுதல் செய்து சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட இருவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த முத்துராஜூம், அவரது சகோதரர் முத்து சுதாகர் என்பவரும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல பாத்திரக்கடையில் வேலை பார்த்துள்ளனர். பின்னர் சென்னை குரோம்பேட்டை அருகில் உள்ள நெமிலிச்சேரிக்கு வந்து அங்கு வீடு எடுத்து குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் கேன்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். குளிர்பானங்கள் சப்ளை செய்தபோது, அதில் போதிய லாபம் இல்லாததால் நண்பர் ஒருவர் மூலம் குட்கா விற்பனையை தொடங்கியுள்ளனர். தண்ணீர் கேன்கள் சப்ளை செய்யும் வாகனங்களில் தண்ணீர் கேன்களுடன் குட்கா பொருட்களையும் மறைமுகமாக ஏற்றி கடைகளில் சப்ளை செய்து வந்துள்ளனர்.  சுமார் 6 வருடங்களாக சிட்லபாக்கம் போலீஸ் எல்லையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் குட்கா விற்பனை தொழிலை செய்து வந்துள்ளனர். குட்கா தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் அதிகளவு குட்கா பொருட்களை வாங்கி ரகசிய விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் பெங்களூருவில் இருந்து காஞ்சிபுரம் வழியாக சென்னை கோயம்பேட்டிற்கு கொண்டு வந்து நகர் முழுவதும் மூடப்பட்ட வேன்களில் குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரிந்தது.

பெட்டிக்கடையில் குட்கா விற்ற வாலிபர் கைது

ஆவடி பட்டாபிராம், ஐஏஎப் சாலையில் இந்து கல்லூரி அருகே, சார்லஸ் (36) என்பவர் பெட்டிக்கடை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக பட்டாபிராம் உதவி கமிஷனர் கண்ணனுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கமிஷனர் தலைமையில் பட்டாபிராம் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சார்லசின் 2 கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹1 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அதே பகுதியில் இருக்கும் சார்லசின் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அங்கு மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த குட்கா போதை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த சார்லசை கைது செய்தனர். பின்னர் நேற்று காலை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

போலீசார் துணையில்லாமல் விற்க வாய்ப்பே இல்லை:

குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘சிட்லபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இவர்கள் ரகசியமாக குட்கா விற்பனை செய்து வந்துள்ளார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதற்கு முன்பு 4 வருடங்களாக இதேபோல் விற்பனை செய்து வந்தனர். இவர்களால் சாதாரணமாக இதுபோன்று தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை ரகசியமாக வெளி மாநிலங்களில் இருந்து எளிதாக கொண்டுவந்து விற்பனை செய்யமுடியாது. உள்ளூர் போலீசாரின் துணை இல்லாமல் இவர்கள் ரகசியமாக குட்கா பொருட்களை விற்பனை செய்து வரமுடியாது. எனவே, இந்த குட்கா விற்பனைக்கும் உள்ளூர் போலீசாருக்கும் கண்டிப்பாக நெருங்கிய தொடர்பு உள்ளது தெளிவாக தெரிகிறது. காரணம், தற்போது கூட உள்ளூர் போலீசார் இவர்களை பிடிக்கவில்லை. சிறப்பு படையினர் தான் இவர்களை பிடித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இவ்வாறு சிறப்பு படையினர் இவர்களை பிடித்து சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தும் சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. பின்னர், இந்த தகவல் பத்திரிகை மற்றும் ஊடக நபர்களுக்கு தெரிந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரத்திற்கு பின்பு தான் எந்த இடம் என்று தெரியாமல் தேடி அலைந்து சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.சிறப்பு படையினர் இவர்களை பிடிக்கவில்லை என்றால் இங்கு குட்கா விற்பனை தொடர்ந்து நடைபெற்று தான் வந்து கொண்டிருக்கும். குட்கா விற்பனையாளர்களும், உள்ளூர் போலீசாருக்கும் இடைய நெருங்கிய தொடர்பின் காரணமாகத் தான் கடந்த இரண்டு வருடங்களாக இங்கு குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்று வந்துள்ளது.  நல்லவேளையாக சிறப்பு படையினர் உள்ளூர் போலீசாருக்கு சோதனை குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் வந்து இவர்களை பிடித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: