டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு எதிரொலி லாரி சரக்கு கட்டணம் உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை எகிறும்

* சரக்கு புக்கிங் கட்டணம் 22 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

* கட்டண உயர்வு வருகிற 24ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

* அரிசி, பருப்பு, காய்கறிகள் லாரிகளில் வருவதால், கட்டண உயர்வால் பொருட்களின் விலையும் உயரும்.

சென்னை: தினம், தினம் அதிகரிக்கும் டீசல் விலை உயர்வால் லாரி சரக்கு புக்கிங் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த லாரி புக்கிங் ஏஜென்ட்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் சர்வதேச சந்தை  நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலை மாற்றி  அமைக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. குறைந்தபாடில்லை. அதாவது, தினமும் 16 பைசா, 11 பைசா, 10 என்று உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை (நேற்று நிலவரப்படி) பெட்ேராலுக்கு ரூ.13.05 வரையும், டீசலுக்கு ரூ.15.2 வரையும் விலை உயர்ந்துள்ளது. அதாவது, நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.58க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.78.10க்கும் விற்கப்பட்டது.

இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது வரலாறு காணாதது என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடும் விலை உயர்வால் வாகனங்களை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்களில் செல்வது என்பது பெருமளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. விலை உயர்வால் பஸ், ரயில்களை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால், கடந்த சில நாட்களாக பஸ், ரயில்களில் அலுவலக நேரங்களில் கூட்டம் நிரம்பி வருகிறது.

இந்நிலையில் டீசல் விலை உயர்வால் லாரிகளில் சரக்கு ஏற்றிச் செல்ல புக்கிங் கட்டணத்தை உயர்த்தப் போவதாக லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.இதுகுறித்து லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சம்மேளன மாநில தலைவர் ராஜவடிவேல் கூறியதாவது: தமிழகத்தில் மட்டும் சுமார் 4.50 லட்சம் லாரிகள் ஓடுகிறது. ஏற்கனவே லாரி உரிமையாளர்கள் கடுமையான சுங்க கட்டணம் உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, டயர் விலை உயர்வு என்று பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையால் வாகனங்களை குறைந்த வாடகைக்கு  இயக்க முடியாத நிலையில் இருந்து வருகிறோம். நஷ்டத்தில் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது டீசல் விலை என்பது வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இப்போது வரை டீசல் லிட்டருக்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் லாரி புக்கிங் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு நாங்கள் ஒவ்வொருவரும் தள்ளப்பட்டுள்ளோம். இதனால், புக்கிங் கட்டணத்தை 22 முதல் 25 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இந்த கட்டண உயர்வு வருகிற 24ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். பொதுமக்கள் கட்டண உயர்வை பொறுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பெட்ரோல், டீசல் விலை எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது அவர்களுக்கு தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்குகள் பெரும்பாலும் லாரிகள் மூலம்தான் கொண்டு செல்லப்படுகிறது. அதே நேரத்தில், பிற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு லாரிகள் மூலமாகத்தான் சரக்குகள் கொண்டுவரப்படுகிறது. அதாவது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் லாரிகளில்தான் வருகிறது. இந்த கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது இந்த விலை உயர்வும் பொதுமக்களுக்கு மேலும் சுமையைத்தான் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

10 டன் லாரிகளுக்கு தற்போது ரூ.8500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தேவை அதிகரிக்கும் நேரத்தில் ரூ.10,000 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் புக்கிங் கட்டணம் 25 சதவீதம் உயருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: