சர்வதேச பயிற்சிக்கு நிதியுதவி தேவை - அர்ஜூனா விருது வீரர் சத்யன் வேண்டுகோள்

சென்னை: சர்வதேச அளவிலான பயற்சிக்கு மேற்கொள்ள நிறுவனங்கள், அமைப்புகள் நிதியுதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல உதவும்  என்று அர்ஜூனா விருது பெற உள்ள டேபிள் டென்னிஸ் வீரர்  சத்யன்  தெரிவித்தார். இதுகுறித்து, சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: அர்ஜூனா  விருது பெற உள்ள தருணத்தை ஆவலுடன் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி  காத்திருக்கிறேன். சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறேன்.  காமன்வெல்த் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கல  பதக்கங்களை வென்றேன்.  ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளேன். அடுத்த 6  ஆண்டுகளில் நடைபெற உள்ள 2 ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளை  இலக்காக கொண்டு பயிற்சி பெற உள்ளேன். அதற்காக ஆண்டுக்கு 150 நாட்கள்   சீனா, கொரியா, ஜப்பான் என ஆசிய நாடுகளில் பயிற்சி பெற திட்டமிட்டுள்ளேன். டேபிள் டென்னிசில் உலக தரத்திலான பயிற்சிகள் ஆசிய நாடுகளில்தான்  கிடைக்கிறது. இந்த பயிற்சி மேற்கொள்ள ஆண்டுக்கு ₹60 லட்சம் வரை  செலவாகும். நிறுவனங்கள், அமைப்புகள் நிதியுதவி அளித்தால் நன்றாக  இருக்கும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்றால் இந்த  பயிற்சி மிக அவசியம். இவ்வாறு சத்யன் தெரிவித்தார். பயிற்சியாளர் ராமன், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர்   வித்யாசாகர், துணைத் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: